பிரசவத்திற்காக கொட்டும் மழையில் 15 கிமீ தூரம் கர்ப்பிணியை டோலியில் தூக்கி வந்த உறவினர்கள்....சாலை வசதி இல்லாததால் தொடரும் அவலம்

திருமலை: சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை பிரசவத்திற்காக 15 கிமீ தூரம் கொட்டும் மழையில் டோலி கட்டி தூக்கி வந்தனர்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மக்கள் அடிப்படை வசதி, மருத்துவ வசதி, சாலை வசதி இன்றியும் தவித்து வருகின்றனர்.இங்குள்ளவர் நோயால் தாக்கப்பட்டால் தங்களுக்குத் தெரிந்த நாட்டு மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். கடுமையான நோயால் உடல்நிலை மிகவும் மோசமாகும் நிலையில் டோலி கட்டி சுமார் 20கிலோ மீட்டர் தூரம் உள்ள மண்டல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கின்றனர். இந்நிலையில் நேற்று விசாகப்பட்டினம் மாவட்டம் சிந்தப்பள்ளி மலைக்கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து உடனடியாக டோலி கட்டி 15 கிமீ தூரம் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். அப்போது கனமழை கொட்டியது.

மழையில் நனைந்தபடியே முள்புதர்கள் நிறைந்த சேறும் சகதியுமான மண்பாதையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜீமடகுல  மண்டலம் கொத்தவலசா கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியை ஓடும் நதியில் டோலிகட்டி சுமந்து வந்தனர். அவருக்கும் குழந்தை பிறந்தது.  மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அரசு கூறி வந்தாலும், தற்போது மக்கள் அடிப்படை வசதிகளான சாலை வசதி, சுத்தமான குடிநீர், மருத்துவம், மின்சாரம்,  கல்வி ஆகியவை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே இப்பிரச்னைகளை தீர்க்க மாநில அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
Tags : Relatives who carried pregnant woman 15km away from Dolly in the pouring rain ....
× RELATED வெந்நீரில் தவறிவிழுந்த குழந்தை பரிதாப பலி