வாணியம்பாடியில் பாலாற்றையொட்டி மணல் கொள்ளையடிக்க பல லட்சத்துக்கு பட்டா நிலங்களை குத்தகைக்கு விடும் அவலம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் பாலாற்றையொட்டியுள்ள பகுதிகளில் பட்டா நிலங்களை குத்தகைக்கு எடுத்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள பாலாற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இங்கு கடும் நடவடிக்கை காரணமாக அரசு நிலங்களில் மணல் கொள்ளை நடந்தது. இதையடுத்து பெரியப்பேட்டை, கொடையாஞ்சிபட்டறை அருகில் உள்ள களர்கொட்டாய் பகுதியில் பாலாற்றையொட்டி தென்னந்தோப்பு மற்றும் பட்டா நிலங்கள் உள்ளன. இங்கும் தற்போது மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதற்கு அவற்றின் உரிமையாளர்களே ஒரு விலையை நிர்ணயம் செய்து, மணல் கொள்ளையர்களுக்கு குத்தகை விட்டுள்ளனர்.

மாதத்துக்கு பல லட்சங்கள் மணல் கொள்ளையர்களிடம் பேரம் பேசி, அவர்களிடம் நிலத்தை விட்டுள்ளனர். இதனால் அந்த நிலங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பட்டா நிலத்தில் மின்வாரியத்தால் அமைக்கப்பட்ட மின்கம்பங்களை சுற்றி மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், மின்கம்பங்கள் மின்கம்பியோடு அந்தரத்தில் தொங்கிய வண்ணம் உள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்து எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த பட்டா நிலத்தில் மணல் கொள்ளை நடக்கும் சம்பவத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் இத்தகைய நில உரிமையாளர்களின் பட்டாக்களை ரத்து செய்வதுடன், நிலங்களை பறிமுதல் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: