மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?: அறிக்கை தர வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? என உயநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தற்போதைய சொத்து மதிப்பை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு வருமானவரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக்கோரி எம்ஜிஆர் நகரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என்றும், வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற ஆட்சேபனை தெரிவித்தும் தீபா மற்றும் தீபக் தரப்பில் பதில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது.

Advertising
Advertising

ஏற்கனவே, ஜெயலலிதாவின் 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், 17 கோடி ரூபாய் அளவுக்கு வரிப்பாக்கி உள்ளதாகவும் வருமான வரித்துறையினர் இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபா, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தீபா, தீபக் வாரிசுகள் என அறிவிக்கும் படியும், வருமானவரி பாக்கியை தீபா, தீபக் கட்ட தயாராக இருப்பதாகவும் வாதிடப்பட்டது. இதையடுத்து மனுதாரர் புகழேந்தி தரப்பு வழக்கறிஞர், சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும், சொத்தாட்சியார் பொறுப்பில் இருப்பதால் தீபா, தீபக் அதற்கு வாரிசு உரிமை கோர முடியாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் அமலாக்கத்துறை சார்பில் ஜெயலலிதா மீது எந்த ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்ற உத்தரவிட்ட நிலையில், தற்போது சொத்துக்கள் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சொத்துக்களை தீபா, தீபக் உரிமை கோர முடியாது என்றால், மக்களுக்கு கொடுப்பதுதான் மனுதாரரின் விருப்பமா? என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் எங்கெல்லாம் உள்ளது. அந்த சொத்துக்களின் தற்போதைய மதிப்பு என்ன? என்பது குறித்து ஒரு முழுமையான அறிக்கையை வருமான வரித்துறையினர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஜெயலிலதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும் அரசு விளக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: