சூரியன் பதிப்பகம் வாயிலாக வெளிவந்த புத்தகத்தை தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு புதிய பாடநூலாக அங்கீகரித்து கல்லூரி நிர்வாகம் கெளரவம்

சென்னை : சூரியன் பதிப்பகம் வாயிலாக வெளிவந்த புத்தகத்தை தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு புதிய பாடநூலாக அங்கீகரித்து நெல்லைச் சேர்ந்த கல்லூரி நிர்வாகம் கெளரவம் வழங்கியுள்ளது.காம்கேர் நிறுவனத்தின் சிஇஓ கே.புவனேஸ்வரி எழுதிய ‘கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் கலக்கலாம் தமிழில்’ என்ற புத்தகம், தினகரன் குழுமத்தின் கீழ் இயங்கி வரும் சூரியன் பதிப்பகம் வாயிலாக வெளியிடப்பட்டு இருந்தது.  சூரியன் பதிப்பகம் என்ற தமிழ் புத்தகங்களை விநியோகிக்கும் ஆன்லைன் இணையதளம் இதுவரை நூற்றுக்கணக்கான தமிழ் புத்தகங்கள் வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த புத்தகத்திற்கு தற்போது உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சிக் கல்லூரியான சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நிர்வாகமானது, கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் கலக்கலாம் தமிழில் என்ற புத்தகத்தை பி.ஏ தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு பாடநூலாக வைத்து கெளரவித்துள்ளது. இந்த உயரிய அங்கீகாரத்தை ஏற்கனவே தொலைபேசி வாயிலாக கே.புவனேஸ்வரிக்கு தெரிவித்த கல்லூரி நிர்வாகம், அதனை உறுதி செய்யும் விதமாக கே.புவனேஸ்வரிக்கு வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளது. கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், டேப்லெட் என அனைத்து நவீன தொழில்நுட்பக் கருவிகளிலும் ஆங்கிலம் போலவே தமிழையும் பயன்படுத்துவது எப்படி என்பதை மிக எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

காம்கேர் கே.புவனேஸ்வரி என்பவர் ஐ.டி நிறுவன சி.இ.ஓ, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர் என பண்முகம் கொண்டவர் ஆவார். இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆகக் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறார். இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடதிட்டமாக உள்ளன. நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அறிமுகம் ஆகத் தொடங்கிய 1992-களிலேயே தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்து, சாஃப்ட்வேர்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற்றதால், தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்த முதல் தொழில்நுட்ப வல்லுநர் என்ற விருதைப் பெற்றுள்ளார்.

Tags : NEX, honor, kepuvanesvari, computer celponilum blended in Tamil, Sun Press
× RELATED கௌசிக ஏகாதசியை முன்னிட்டு...