நல்லாசிரியர் விருது: ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரை செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: நல்லாசிரியர் விருது பெற தகுதியுடைய ஆசிரியர்களின் பெயர்களை ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் பரிந்துரைக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வருடந்தோரும் செப்டம்பர் 5ம் தேதி நல்லாசிரியர் விருதுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாக செயல்படக்கூடிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் ரொக்க பணத்தோடு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

இந்த வருடம், நல்லாசிரியர் விருதுகளை பெற கூடிய ஆசிரியர்களுக்கு 17- வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில், சுயஒழுக்கம், நேரம் தவறாமை, மாணவர்கள் மற்றும் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க பாடுபடுபவர்கள், அதேபோல அரசியல் கட்சிகளை சாராதவர்கள், பள்ளி முடிந்ததும் மாணவர்களுக்கு தனியாக டியூஷன் எடுக்காதவர்கள் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. பொதுவாக, அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் எடுக்கக்கூடாது. அவ்வாறு டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரை பட்டியலில் சேர்க்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், அரசியல் சார்ந்தவர்கள், தனியே டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரை பட்டியலில் சேர்க்கும் குழு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, முன்னதாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஆசிரியர்கள் சுமார் ஆயிரம் பேர் மீது ஒழுங்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களை பரிந்துரை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது.

இதுதவிர, குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற ஆசிரியராக இருக்கவேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. குற்றப்பின்னணி இல்லாத ஆசிரியர்களாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்று, இந்த 17 நெறிமுறைகளில் இடம்பிடித்துள்ள ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் பரிந்துரை பட்டியலை ஆகஸ்ட் - 14ம் தேதிக்குள் தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: