தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும் தகவல் அளித்துள்ளது. அதேபோல, கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை அடுத்த இரண்டு நாட்கள் தொடரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னை வானிலை ஆய்வு மையம்:

மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட வடதமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, பூம்புகார் மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் புதுச்சேரி, காலாப்பேட், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்கிறது.  

நேற்று இரவு சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில்  பரவலாக மழை பெய்தது. சென்னையில், ராயப்பேட்டை மெரினா, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்துள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளதால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்தநிலையில் வட தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: