மேட்டூர் அணையின் உபரி நீரை கொண்டு 100 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சேலம்: மேட்டூர் அணையின் உபரி நீர் மூலம் 565 கோடி ரூபாய் மதிப்பில் 100 ஏரிகளை நிரப்ப திட்டமிடப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் சின்னம்பட்டி இடையே 29 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவெளி சாலை மற்றும் இரண்டு பாலங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர் தொழில்வளம் சிறக்க சாலைவசதி மேம்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர் இதற்கு சாலை கட்டமைப்பு முக்கியமானது என தெரிவித்தார். ஆனால் சாலைத் திட்டங்களை நிறைவேற்ற நிலங்களை கையகப்படுத்துவது முக்கிய பிரச்சனையாக உள்ளதாகவும் எனவே மக்கள் தாங்களாக முன் வந்து நிலங்களை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதை தொடர்ந்து சேலம் உருக்காலையில் பயன்படுத்தப்படாத இடத்தில் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைக்க முயற்சி எடுக்கப்படும் என குறிப்பிட்ட முதல்வர் இத்தொழிற்சாலை மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறினார். இதனை தொடர்ந்து எடப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியை முதலமைச்சர் வழங்கினார். இதனை அடுத்து விழாவில் பேசிய அவர் போட்டி தேர்வுகளில் வெற்றிப்பெற மாணவ மாணவிகள் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக உள்ளது எனவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் ஆறுகளில் ஏற்பட்டுள்ள மாசுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் உபரி நீர் மூலம் 565 கோடி ரூபாய் மதிப்பில் 100 ஏரிகளை நிரப்ப திட்டமிடப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் தமிழகத்தில் நிதி ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அணை பாதுக்காப்பு சட்ட மசோதாவில் மாற்றம் செய்யக்கோரி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் கூறினார். இதை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி எந்த மாநில அரசும் தடுப்பணை கட்ட கூடாது என்றும் அவர் கூறினார். மேலும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமானபத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.


× RELATED சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில்...