பார் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் வசூல் வேட்டை: 7 போலீஸ் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் டாஸ்மாக் பார் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் காவல்துறை அதிகாரிகள் 7 பேர் உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டாஸ்மாக் பார் நடத்திய நெல்லையப்பன் என்பவர் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகம் அருகே கடந்த மே மாதம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் வெளியிட்ட வீடியோவில் அதிமுக பிரமுகர் உட்பட போலீஸ் அதிகாரிகள் சிலர், லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தார்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீசார் ரகசியமாக நடத்திய விசாரணையில் நெல்லையப்பன் மட்டுமின்றி மேலும் பல்வேறு பார் உரிமையாளர்களிடமும் அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்தியது தெரியவந்துள்ளது. பார் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் போலீஸ் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளின் பட்டியலை சேகரித்த போலீசார், இதற்கான ஆதாரங்களையும் திரட்டியுள்ளனர். துணை போலீஸ் கண்காணிப்பாளர் சுப்புராஜ், ஆய்வாளர் கண்ணன் மாற்றும் டாஸ்மாக் துணை மேலாளர் அய்யாவு ஆகியோர் நெல்லைப்பரை மிரட்டி பெரிய அளவில் லஞ்சம் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் 7 பேர் உட்பட 10 பேர் மீதும் கூட்டுசதி, லஞ்ச ஒழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புப் போலீசார், இலாகா பூர்வமான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: