காவிரியாற்றில் கர்நாடகா திறந்து விட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது

பிலிகுண்டுலு: காவிரியாற்றில் கர்நாடகா திறந்து விட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது. கர்நாடகாவின் குடகு உள்ளிட்ட மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலும்  கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஜூலை 17 ம் தேதி கே.ஆர்.எஸ் அணையில் இருந்து, விநாடிக்கு 355 கனஅடியும், கபினி அணையில் இருந்து 500 கனஅடியும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. விநாடிக்கு 855 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு  8,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

124 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக உள்ளது. 84 அடி கொள்ளளவு கபினி அணையின் நீர் மட்டம் 69 அடியாக இருக்கிறது. கே.ஆர்.எஸ். அணையில் நீர்திறப்பு 3,199 கனஅடியில் இருந்து 4,800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2,000 கன அடியில் இருந்து 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டிருந்தார். தமிழகத்தில் போதிய மழை இல்லாத காரணத்தினால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் நீர் திறக்க முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் தெரிவித்திருந்தார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அதிகாரிகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழகத்திற்கு கர்நாடக அணிகளில் இருந்து நாளொன்றுக்கு 855 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதாவது கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 355 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது நீர் திறப்பு அதிகரித்துள்ளது. மழை காரணமாக மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Karnataka, Water,, Pilikundulu, Arrived in Kaveri River
× RELATED சுவாமிகள் தீர்த்தவாரியுடன் கடலூர்...