பட்ஜெட் வரியால் பரிதாபம் பங்குச்சந்தையில் ரூ.7,712 கோடி வாபஸ் பெற்ற முதலீட்டாளர்கள்

புதுடெல்லி: பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதம் இதுவரை ₹₹7,712 கோடியை விலக்கிக் கொண்டுள்ளனர். இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டவர் முதலீடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கடந்த 5 மாதங்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் கணிசமான அளவு முதலீடு செய்தனர். தேர்தல் நெருங்கும் நிலையில் முதலீடு வெளியேறியபோதும், மீண்டும் நிலையான அரசு அமையும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்ததால் முதலீடு அதிகரித்தது. பாஜ வெற்றிக்கு பிறகும் இது தொடர்ந்தது. ஆனால், மத்திய பட்ஜெட் அறிவித்த பிறகு இது தலைகீழாக மாறியது. மத்தியில் புதிய பாஜ அரசு அமைந்த பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்ட துவங்கினர்.

இதன் எதிரொலியாக இந்த மாதம் கடந்த 19ம் தேதி வரை இந்திய பங்குச்சந்தையில் ₹9,371.12 கோடி முதலீடு செய்தனர். இதில் ₹7,712.12 கோடியை வெளியேற்றி விட்டனர். இதனால் இந்த மாதம் இதுவரையிலான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிகர முதலீடு பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் சேர்த்து மொத்தம் ₹1,659 கோடி மட்டுமே.  இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்ட வரி காரணமாக முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டியுள்ளனர். அதோடு, இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து கணிப்பு வெளியிட்ட ஆசிய வளர்ச்சி வங்கி, பொருளாதார வளர்ச்சியை குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. அதோடு பருவமழை குறித்த அறிவிப்புகளும் இந்திய சந்தையில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தவில்லை. இதனால் முதலீடுகள் அதிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்றனர்.

Tags : Investors,receiving, Rs 7,712 crore ,stock market
× RELATED பங்கு சந்தையில் முறைகேடு 39 இடங்களில் ஐடி சோதனை