சென்னையை தொடர்ந்து 11வது ராணுவ கண்காட்சி லக்னோவில் நடைபெறும்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: அடுத்த ராணுவ கண்காட்சி, உத்தரப் பிரதேசம் லக்னோவில் நடைபெறும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவ கண்காட்சி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் 10வது ராணுவ கண்காட்சி சென்னை அருகேயுள்ள திருவிடந்தையில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. 11வது கண்காட்சி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் அடுத்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவ கண்காட்சி லக்னோவில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இதில் சர்வதேச மற்றும் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆயுதங்களையும், தயாரிப்பு பொருட்களையும் காட்சிக்கு வைக்கின்றன. இந்தியாவை ராணுவ தளவாட உற்பத்தி மையமாக காட்ட, கடந்த கண்காட்சியில் மத்திய அரசு முயற்சிகள் எடுத்தது. அதேபோல் அடுத்தாண்டு நடைபெறும் ராணுவ கண்காட்சியிலும், இந்திய நிறுவனங்கள் அதிகளவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

2025ம் ஆண்டுக்குள் இந்திய நிறுவனங்களின் ஆயுத விற்பனை ₹1 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்ட்டுள்ளது. ராணுவத்துறையில் முதலீடு செய்ய, உத்தரப் பிரதேசம் சிறந்த இடம் என்பதை காட்டுவதற்காகவும், இந்த கண்காட்சி உ.பி.யில் நடத்தப்படுகிறது. உ.பி.யில் ஏற்கனவே எச்.ஏ.எல் நிறுவனத்தின் 4 பிரிவுகள் லக்னோ, கான்பூர், கோர்வா மற்றும் நைனி ஆகிய பகுதிகளில் உள்ளன. இது தவிர 9 ஆயுத தொழிற்சாலைகளும், காசியாபாத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி மையமும் உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் ஆயுதங்கள் தயாரிக்க இந்த கண்காட்சி வழிவகுக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories: