மத்திய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத் திருத்த வரைவு வெளியீடு

புதுடெல்லி: அலோபதி, ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் வசதிகள் மற்றும் சேவைகளில் குறைந்தபட்ச தரத்தை நிர்ணயித்து, மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஒழுங்குமுறை சட்டத்திருத்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது.‘மருத்துவமனைகள் பதிவு மற்றும் ஒழுங்குமுறை சட்டம்’ கடந்த 2010ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதன்கீழ், அனைத்து மருத்துவமனைகளும் பதிவு செய்வது கட்டாயம். இச்சட்டத்தில் தற்போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 3வது முறையாக திருத்தம் செய்து, அதற்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் 43 நாட்களில் கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவ பரிசோதனை ஆய்வகங்களுக்கு மட்டுமே இருந்த குறைந்தபட்ச தரம், தற்போது மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவமனை கட்டிடம் நோயாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், பார்வையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். சுற்றுப்புறம் சுகாதாரமாக இருத்தல் வேண்டும். போதுமான இடவசதி இருக்க வேண்டும். வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் முறையான தண்ணீர் வசதியுடனும் கட்டிடம் அமைந்திருக்க வேண்டும்.

மருத்துவமனையின் பெயர், உள்ளூர் மொழியில் எழுதப்பட்ட பெயர் பலகை அவசியம் இருக்க வேண்டும். மருத்துவமனைக்குள் டாக்டரின் பெயர்கள் அவர்களின் பதிவெண், மருத்துவ கட்டணம், நிபுணர்கள் பரிசோதிக்க வரும் நேர அட்டவணை ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் கல்வித் தகுதி, அனுபவம் ஆகியவற்றையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். கிளினிக் அல்லது பாலிகிளினிக்கில் குறைந்தபட்சம் ஒரு ஊழியர் பணியில் இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இந்த விதிமுறைகள் மூலம் மருத்துவ சேவையில் ஒரே மாதிரியான தரத்தை கொண்டு வர முடியும் என அமைச்சக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இச்சட்டம் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும். ஆனாலும், இச்சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு கட்டாயப்படுத்த முடியாது. தற்போது உபி, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மிசோரம், உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மட்டுமே இச்சட்டத்தை அமல்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Draft Publication ,Hospital Regulation ,Act , Ministry, Health
× RELATED சாலையோர வியாபாரிகள் ஒழுங்குமுறை...