மக்கள் ஏற்றுக் கொள்ளாததை நாங்கள் ஏற்க மாட்டோம்: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை: மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார். சென்னை விமான நிலையத்தில் மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அப்படியென்றால், மத்திய அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை  தெளிவாக அறிவிக்க வேண்டும். தமிழிசை சோலை வனத்தை பாலைவனமாக்கமாட்டோம் என கூறியிருக்கிறார். ஆனால் நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால் பெட்ரோலை உணவுக்குப் பதிலாக உண்ண முடியாது. எனவே அடிப்படையில் உணவு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டுக்கு மிக மிக முக்கியமான ஒன்று. அதனால் தொழில் வளர்ச்சிக்கென தனியே பொருளாதார மண்டலம் இருப்பது போல், விவசாயத்துக்கு என தனியே விவசாய மண்டலம் ஒதுக்கப்பட வேண்டும். விவசாய மண்டலத்தில் மத்திய அரசு கை வைக்கக்கூடாது.

 ஏனென்றால், இது எங்களுக்கு உணவு தரக்கூடிய விவசாய நிலம். அந்த நிலத்தில் நீங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றாதீர்கள் என்பதைத்தான் மறுபடி மறுபடி தமிழக மக்கள் சொல்லி கொண்டிருக்கின்றனர். சேலம் 8 வழி சாலைக்கு மக்கள் எதிர்ப்பு காரணமாக, அதிவேக சாலை என அரசு பெயர் மாற்றி வைத்துள்ளது. அப்போதும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களுடைய விளைநிலங்களை பறிக்கக்கூடிய எந்தவொரு திட்டத்தையும் திமுக ஏற்றுக்கொள்ளாது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத எதையுமே நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்பது உறுதி. இவ்வாறு கனிமொழி கூறினார்.

Related Stories: