இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய விவகாரம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் 16 பேருக்கு நேரடி தொடர்பு அம்பலம்

* பகீர் தகவலால் அதிகாரிகள் அதிர்ச்சி

* ஆவணங்களை வைத்து விசாரணை
Advertising
Advertising

* தமிழகத்தில் மேலும் 15 பேருக்கு தொடர்பு

சென்னை: இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இவர்கள் நேரடி தொடர்பில் இருந்து வந்ததாகவும், மேலும், 15 பேருக்கு தொடர்பு உள்ளது என்றும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையை போன்று இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அந்நாட்டு அரசு தகவல் அளித்தது. அதைதொடர்ந்து கேரளா மற்றும் தமிழகத்தில் நாகை, சென்னை மற்றும் மதுரையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தீவிரவாதத்திற்கு நிதி திரட்டியது, ஆட்களை சேர்ந்தது உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.அதைதொடர்ந்து கடந்த 13ம் தேதி சென்னை மற்றும் நாகையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.அதில், ‘அன்சுருல்லா’ என்ற புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி இந்தியாவில் இஸ்லாமிய ஆதரவு ஆட்சியை ஏற்படுத்தவும், அதற்காக நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதலை நடத்த உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிதி திரட்டியதும், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

அதை தொடர்ந்து சென்னையை சேர்ந்த சையது புகாரி மற்றும் நாகையை சேர்ந்த அசன் அலி, அவரது உறவினர் ஆரிஷ் முகமது ஆகியோர் மீது தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அசன் அலி மற்றும் ஆரிஷ் முகமது ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சையது புகாரியை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணையில் வைத்துள்ளனர்.இதற்கிடையே சிரியாவில் பயிற்சி பெற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்த மதுரை முகமது ஷேக் மொஹ்தீன், திருவாரூர் அகமது அசாருதீன், சென்னை தொஹபீக் அகமது, தேனி முகமது அக்சர், கீழக்கரை மொய்தீன் சீனி சாகுல் அமீது, நாகப்பட்டினம் முகமது இப்ராகிம், தேனி மீரான் கனி, பெரம்பலூர் குலாம் நபி ஆசாத், ராமநாதபுரம் ரபி அகமது, முன்தாப்சீர், பைசல் ஷெரிப், தஞ்சை உமர் பரூக், வழிநோக்கம் பரூக், திருநெல்வேலி முகமது இப்ராகிம் ஆகிய 14 பேரும் அந்த நாட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்களை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 15ம் தேதி இரவு டெல்லி விமான நிலையத்தில் கைது செய்தனர்.பின்னர் 14 பேரையும் பூந்தமல்லி எம்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட 16 பேரையும் சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி 8 நாள் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.டெல்லியில் கைது ெசய்யப்பட்ட 14 பேரின் வீடுகளில் நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் ராமநாதபுரம், தேனி, சென்னை, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது. இதில், ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 3 மெமரி கார்டுகள், 1 ஹட் டிஸ்க், 2 பென் டிரைவ், 9 சிடிக்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்பட பல பறிமுதல் செய்யப்பட்டது.கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சிரியாவை தலைமையிடமாக கொண்டு  செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தி அவர்களது உத்தரவுகளை 16 பேரும் ரகசியமாக நிறைவேற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைக்கும் வகையில் ‘அன்சுருல்லா’ என்ற அமைப்புக்கு இஸ்லாமிய வாலிபர்களை மூளை சலவை செய்து ஆட்களை சேர்த்திருந்ததும், அப்படி ஆட்கள் சேர்க்கப்பட்ட நபர்களில்  சிலரை சிரியாவில் தீவிரவாத பயிற்சி மற்றும் வெடி குண்டுகள் தயாரிப்பது எப்படி மற்றும் அதை கையாளுவது எப்படி என்று பயிற்சி பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பயிற்சி பெற்று திரும்பியவர்கள் தான் டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேர் என்றும், தமிழகத்தில் மேலும், 15 பேர் இந்த சதித்திட்டத்தில் தொடர்பு இருப்பதும் 2 நாளாக நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் குண்டு வெடிப்புக்கு நிகழ்வுக்காக இடங்களை தேர்வு செய்து வந்ததாகவும், அதற்கான நிதிகளை நாடு முழுவதும் திரட்டியதாகவும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இதையடுத்து நிதி வழங்கிய நபர்கள் யார் யார்? அவர்கள் பின்னணி என்ன என்பது குறித்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளில் சிறப்பு குழு ஒன்று ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் சிலருக்கு விளக்கம் கேட்டு தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 8 நாள் விசாரணை முடிவில் அதாவது வரும் 26ம் தேதிக்கு பிறகு தான் இந்த சதித்திட்டத்தின் முழு விபரங்களும் தெரியவரும் என்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கைது செய்யப்பட்ட  14 பேர் என்றும், தமிழகத்தில் மேலும், 15 பேர் இந்த சதித்திட்டத்தில் தொடர்பு இருப்பதும் 2 நாளாக நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: