×

சென்னை மக்களுக்கு குடிநீருக்கே வழியில்லாத நிலையில் தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்க செம்பரம்பாக்கம் ஏரியில் புதிய கால்வாய்

* அதிகாரிகள் அலட்சியம்
* கண்டுக்கொள்ளாத அரசு
சென்னை: சென்னை மக்களுக்கு குடிநீருக்கே வழியில்லாத நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் பெய்யும் மழை நீரை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதற்காக ஏரியின் நடுவே புதிதாக கால்வாய் தோண்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி  முற்றிலும் வறண்டு போனது. இதனால் ஏரியிலிருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு ஏரி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கிடையே மொத்தம் 6303 ஏக்கர் பரப்பளவில் செம்பரம்பாக்கம் ஏரி பரந்து விரிந்து உள்ளது. இந்த ஏரியில் 3645 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்கலாம். ஏரியின் நீர்மட்டம் 24 அடியாகும். இந்த ஏரியை நம்பி 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமும் நடந்து வருகிறது. இதற்கிடையே பருவ மழை பெய்யாததால் ஏரியில் தண்ணீர் முற்றிலும் வற்றிப் போனது. இதனால் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு மட்டுமன்றி பெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கும் இங்கிருந்துதான் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. அதுவும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 191 கோடி மதிப்பீட்டில் ஏரியை முழுவதும் தூர்வாரி, ஆழப்படுத்தி, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அரசு சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. ஏரியை ஆழப்படுத்துவதன் மூலம் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.இந்நிலையில், மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், கடந்த வாரம் சில நாட்கள் ஏரிப்பகுதியில் லேசான மழை பெய்தது. அவ்வாறு பெய்யும் மழை நீரை பெரும்புதூர் சிப்காட் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக கொண்டு செல்வதற்காக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஏரியின் நடுவிலிருந்து சிப்காட் வரை கால்வாய் தோண்டும் பணி நடந்து வருகிறது.இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு விட்டதால் சென்னைக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதே போல பெரும்புதூர் சிப்காட் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாமல் போனது.

தற்போது சில நாட்களாக விட்டு விட்டு லேசாக மழை பெய்து வருகிறது. அவ்வாறு பெய்யும் மழை நீர் மிக மிகக் குறைந்த அளவே இருப்பதால் குடிநீர் பயன்பாட்டிற்கு அனுப்ப இயலாது. குறைவாக கிடைக்கும் அந்த மழை நீரை தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் ஏரியின் நடுவே மழைநீர் தேங்கும் பகுதியிலிருந்து சிப்காட் வரை கால்வாய் வெட்டப்பட்டு வருகிறது. குறைவாக கிடைக்கும் நீரைக்கூட வீணாக்காமல் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதால் தற்போது கால்வாய் வெட்டப்பட்டு வருகிறது என்றார்.மழை நீர் மிகக் குறைந்த அளவே இருப்பதால் குடிநீர் பயன்பாட்டிற்கு அனுப்ப இயலாது. குறைவாக இருப்பதால் ஏரி நீரை தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் ஏரியின் நடுவே மழைநீர் தேங்கும் பகுதியிலிருந்து சிப்காட் வரை கால்வாய் வெட்டப்பட்டு வருகிறது.


Tags : New canal , Sembarambakkam lake ,provide water , industries
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்