கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி எதிரொலி அத்திவரதரை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: காஞ்சியில் தலைமை செயலாளர் பேட்டி

சென்னை : காஞ்சியில் அத்திவரதரை தரிசிக்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். இதன் எதிரொலியாக பக்தர்கள் எந்தவித சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை செயலாளர் சண்முகம் கூறினார். காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு தரிசனம் தருவதால் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் இறந்தனர்.  இந்நிலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாநில அரசும், மாவட்ட நிர்வாகமுூம செய்து தரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.  பின்னர் தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அத்திவரதர் வைபவத்திற்கு வரும் பக்தர்கள் நலன் கருதி, கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்படும்.  

பொதுமக்கள் ஒருங்கிணைப்பு மையத்திற்காக இலவச தொலைபேசி எண் 1800-425-8978, 044 27237425, 27237207 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். கூடுதலாக போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். வரிசையில் நின்று செல்லும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப்பட்டுள்ளன. ரங்கசாமி குளத்தில் இருந்து கோயிலுக்கு வரும் முதியவர்களுக்கு பேட்டரி கார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 3200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நோயாளிகள், முதியவர்களுக்கு பழச்சாறு வழங்கப்படும். கூடுதலாக மருத்துவமுகாம் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்படும். பக்தர்கள் இளைப்பாற நாற்காலிகள் போடப்படும். பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தற்போது 1500 வீல்சேர்கள் வசதி செய்யப்பட உள்ளன. கூடுதலாக தன்னார்வலர்கள் ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்திவரதரை வேறு இடத்துக்கு மாற்ற முடியாது. ஆகம விதியிகள் படிதான் அத்திவரதரை தரிசிக்க முடியும். பக்தர்கள் வசதிக்கு இனி வருங்காலங்களில் இன்னும் சிறப்பான ஏற்பாடுகள் செய்ய முடியும். பிரதமர் வருவது பற்றி எந்த தகவலும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: