தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு: வண்ணாரப்பேட்டையில் பயணிகள் அவதி

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் 1 லட்சம் பேர் வரையில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சிக்கி தவித்து வருகிறது. ஆங்காங்கே மெட்ரோ ரயில் பல மணி நேரம் நிறுத்தி வைப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி சென்ற மெட்ரோ ரயிலின் இன்ஜினில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, சென்ட்ரல் நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு மாற்று ரயிலில் வண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால், 2 மணி நேரமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை 8.15 மணியளவில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானநிலையம் நோக்கி மெட்ரோ ரயில் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அப்போது, தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியபட்டது.

இதையடுத்து ரயிலை இயக்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. ரயிலில் ஏறிய பயணிகள் அனைவரும் வண்ணாரப்பேட்டை நிலையத்திலேயே இறக்கி விடப்பட்டனர். பின்னர், சம்பவம் குறித்து தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து தொழில்நுட்ப அதிகாரிகள் பிரச்னையை சரிசெய்யும் பணியில் இறங்கினர். தொடர்ந்து 30 நிமிடமாக போராடி தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தனர். 8.45க்கு ரயில்கள் வழக்கமான கால அட்டவணையின் படி இயக்கப்பட்டது.

இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து இரண்டாவது நாளாக வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் செல்லும் வழித்தடத்தில் ெதாழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்பை ஏற்படுத்தியுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததே இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: