சந்திராயன் -2 மூலம் நிலவை பற்றிய பல புதிய தகவல்கள் கிடைக்கும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

சென்னை: சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படுவதின் மூலம் சந்திரனை பற்றிய பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று இஸ்‌ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று பகல் 12.30 மணி விமானத்தில் பெங்களூருவில் இருந்து சென்னை வந்து காரில் ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டுச்சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; சந்திரயான் - 2வை 22ம் தேதி பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது. கடந்த 15ம் தேதி இறுதிக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில தொழில் நுட்பக்கோளாறுகள் சரி செய்யப்பட்டுவிட்டன. எல்லா பணிகளும் முழுமையாக நிறைவடைந்து விண்கலம் சந்திரனை நோக்கி பாய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. அதற்கான ஒத்திகையும் முடிந்துள்ளது. இன்று (ஞாயிறு) மாலை 6.43 மணிக்கு அதற்கான கவுன்டவுன் தொடங்குகிறது. திங்கள்கிழமை சரியாக பகல் 2.43 மணிக்கு சந்திராயன் -2 விண்ணில் செலுத்தப்படும்.

Advertising
Advertising

பணிகள் அனைத்தும் நன்றாக சென்று கொண்டு இருப்பதால் குறிப்பிட்ட நேரத்தில் விண்ணில் சந்திராயன்-2 ஏவப்படும். சந்திராயன் -2 விண்ணில் ஏவப்பட்டப்பின் 48 நாட்களுக்கு சந்திரனை தொடர்ந்து சுற்றிவரும். அதன் பின்பு யாரும் இறங்காத இடமான சந்திரனின் தெற்கு துருவப்பகுதியில் சந்திராயன் -2 இறங்கும். சந்திராயன் -2 தெற்கு துருவப்பகுதியில் இறங்குவதால் இந்தியாவிற்கு விஞ்ஞன ரீதியாக புதிய தகவல்கள் நிறைய கிடைக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. உலக அரங்கில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாக நிலவில் நீர் இருப்பதை சந்திராயன் ஒன்று தான் முதலில் கண்டுபிடித்தது. அதுபோல் சந்திராயன்-2 மூலம் நிறைய புதிய கண்டுபிடிப்புகள் நடக்கும். அதோடு பல புதிய  தகவல்கள் கிடைக்கும். எனவே நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் சந்திராயன் -2 எப்போது விண்ணில் ஏவப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

Related Stories: