காலாவதியான 55 ஆயிரம் ‘செக்’கில் மக்கள் பணம் ரூ.69.30 கோடி முடக்கம்?: சிஏஜி அறிக்கையில் தகவல்

சென்னை: அரசிடம் உள்ள 55 ஆயிரம் காசோலைகள் உரிய காலத்தில் பயன்படுத்தாத காரணத்தால் அவை தேதி காலாவதியாகி மக்கள் பணம் ₹ 69.30 வங்கியில் யாரும் பயன்படுத்த முடியாமல் முடங்கி உள்ளது என்று மத்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கையை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ₹ 69.30 கோடி மதிப்புள்ள 55 ஆயிரம் காசோலைகள் பல ஆண்டுகளாக பணமாக்கப்படவில்லை. அவை காலாவதியாகிவிட்டதாலும் அந்த பணத்தை மாற்று வழியில் பெற அரசு முயற்சிக்கவில்லை. இதனால் 69.30 கோடி ரூபாய் வங்கியில் யாருக்கும் பயனில்லாமல் தூங்கிக் கொண்டுள்ளது.தணிக்கை துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காசோலைகள் வழங்கப்பட்ட மாதத்திலிருந்து மூன்று மாத காலத்திற்குள் அவை பணமாக்கப்படாவிடில் அக்காசோலைகள் காலாவதி ஆனது பற்றி பணம் பெறுபவர்களுக்கு தெரிவித்து காலாவதியான காசோலைகளைத் திரும்ப ஒப்புவித்து புதிய காசோலைகளை பெற்றுக்கொள்ளுமாறு சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர் அறிவுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கருவூல விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசோலைகளுக்கு எதிராக பணம் வழங்கப்படவில்லை எனில் காசோலையை ரத்து செய்து சம்பந்தபட்ட தலைப்பின் கீழ் செலவினத்தை சரிசெய்ய பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஏழு சம்பள கணக்கு அலுவலகங்கள் அளித்த விவரங்களின்படி 55 ஆயிரத்து 269 காசோலைகள் 30 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு இதுவரை பணமாக்கப்படவில்லை. அதாவது ₹10.90 கோடி மதிப்புள்ள 1256 காசோலைகள் 5 ஆண்டுகள் வரையிலும், ₹ 7.36 கோடி மதிப்புள்ள 10,163 காசோலைகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலும், ₹ 39.98 கோடி மதிப்புள்ள 34 ஆயிரத்து 206 காசோலைகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரையிலும், ₹ 11.03 கோடி மதிப்புள்ள 9 ஆயிரத்து 671 காசோலைகள் 20 ஆண்டுகளுக்கு மேலும் பணமாக்கப்படாமல் உள்ளன. நீண்ட நிலுவையிலுள்ள இந்த பிரச்னைகளை தீர்ப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.153 வங்கி கணக்குகள் இயக்கப்படவில்லை சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சத்துணவுத் திட்டத் துறை ஆகிய துறைகளின் மாவட்ட அலுவலர்களால் மொத்தம் 422 வங்கி கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. இதில் மொத்தம் ₹ 201.31 கோடி கையிருப்பு உள்ளது. இவற்றில் 153 கணக்குகள் ஓர் ஆண்டுக்கும் மேலாக இயக்கப்படவில்லை என்று கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: