ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 52 பேரின் பதவி உயர்வு நிறுத்திவைப்பு: பதிவுத்துறையில் பரபரப்பு

சென்னை: ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பதாக கூறி 52 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பதிவுத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பத்திரப்பதிவுத் துறையில் உதவியாளர், சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஏஐஜி, டிஐஜி என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணி மாறுதல் செய்யப்படுவது மட்டுமின்றி, பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக தகுதி வாய்ந்த நபர்கள் பட்டியல் பதவி உயர்வுக்கு தயார் செய்யப்படுகிறது.அந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, தண்டனைக்கு ஆளானவர்களாக இருந்தால் அவர்களது பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 82 மாவட்ட பதிவாளர்கள் பதவி உயர்வு பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் ஒழுங்கு நடவடிக்கை ஆளானவர்களின் விவரங்களை அனுப்பி வைக்க ஐஜி, டிஐஜிக்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், 52 பேர் மீது 17 பி பிரிவு நடவடிக்கை நிலுவையில் இருப்பதும், தண்டனை நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்தது.

அதே நேரத்தில் 31 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவு பணியில் இருந்தால், அவர்களை நிர்வாக பணி அல்லது தணிக்கை போன்ற பிற பணிகளுக்கு மாற்ற வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் பதிவு பணியில் இருந்தவர்களுக்கு பதிவு பணியே வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் லட்சக்கணக்கான பணம் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கியது. அந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த மாவட்ட பதிவாளர், சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறை, பதிவுத்துறை ஐஜிக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் அந்த சார்பதிவாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், மாவட்ட பதிவாளர்கள் சிலரை பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: