அமமுகவில் இருந்து அதிமுகவிற்கு ஆள்பிடிப்பு முதல்வர் நடத்திய பேரம் குறித்த ஆடியோ விரைவில் வெளியாகும்: டி.டி.வி தினகரன் பேட்டி

சென்னை: பணம், ஒப்பந்தப் பணிகளை வழங்கி அமமுகவில் இருந்து ஆளுங்கட்சிக்கு ஆட்களை பிடிக்கும் முதல்வர் பேசிய ஆடியோ விரைவில் வெளியாகும் என்று டிடிவி தினகரன் கூறினார். சென்னை குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் பகுதியில் அமமுக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.  பின்னர்  செய்தியாளர்களுக்கு  டி.டி.வி தினகரன் அளித்த பேட்டி:  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சிக்கு ஆள் பிடிக்கும் பணியில் உள்ளார்.

மதுரையில் அமமுக மாவட்ட செயலாளர்களிடையே பணம் மற்றும் அரசு ஒப்பந்த பணி வழங்க, அதற்காக கட்சி மாறவேண்டும் என கேட்டுள்ளார். அதன் ஆடியோ விரைவில் வெளியிடப்படும். அதுபோல் தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னையை, பற்றாக்குறை என ஒரேவார்த்தையில் முடிக்கிறார்கள். அதேபோல் மாணவர்கள், மக்கள் பிரச்னைகளில் அக்கறை காட்டாமல், சட்டமன்ற  உறுப்பினர்கள் நலனில் மட்டும் அக்கறை காட்டும் அரசாக அதிமுக அரசு விளங்குகிறது.தற்போது அமமுக கட்சியை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால் வேலூர்  தொகுதி நாடாளுமன்ற தேர்தலில்  போட்டியிடவில்லை. கட்சியை பதிவு செய்து சின்னம் கிடைத்த பின்னர் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம் என்றார்.


Tags : Audio ,CM's ,bargaining,Ammukku , AIADMK
× RELATED முதல்வர் வருகைக்காக தூய்மை பணியில்...