கிருஷ்ணகிரி அருகே பயங்கரம் காதல் திருமணம் செய்ததால் சென்னை இன்ஜினீயர் கடத்தி கொலை: தண்டவாளத்தில் சடலம் வீச்சு

கிருஷ்ணகிரி: காதல் திருமணம் செய்த சென்னை சாப்ட்வேர் இன்ஜினீயரை கடத்திச் சென்று, கொடூரமாக கொலை செய்த ஆசாமிகள், கிருஷ்ணகிரி அருகே ரயில்வே தண்டவாளத்தில் சடலத்தை வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சையத் அமீதுல்லா. இவரது மகன் சையத் தன்வீர் அகமத் (35). இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தபோது, அதே கல்லூரியில் எம்எஸ்.சி., படித்த மதுரையைச் சேர்ந்த ஷில்பா(32) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. அவர், பெங்களூரு ராஜாஜி நகரில் வசித்துள்ளார். ஷில்பாவின் தாய் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியையாக உள்ளார். தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஷில்பாவை அகமத் திருமணம் செய்துள்ளார். பின்னர், அவருக்கு அயர்லாந்து நாட்டு பிரபல நிறுவனம் ஒன்றில், சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை கிடைத்து ஷில்பாவுடன் சென்று தங்கியிருந்தார். இந்நிலையில், கர்ப்பமடைந்த ஷில்பாவுடன் நாடு திரும்பிய அகமத், பிரசவத்திற்காக தாய் வீட்டில் விடுவதற்காக ராயக்கோட்டைக்கு வந்துள்ளார். அங்குள்ள பஜார் தெருவில் ஷில்பாவின் பெற்றோர் வீட்டில், கடந்த ஒரு மாதமாக இருந்துள்ளனர். இதனிடையே, கடந்த 12ம் தேதி காலை, பெங்களூருவுக்கு புறப்பட்டுச்சென்ற அகமத், அங்குள்ள மடிவாளம் பகுதியில் இருந்து மனைவிக்கு செல்போனில் மெசேஜ் செய்துள்ளார். பின்னர், மாலை 4 மணியளவில் ஓசூர் வந்து விட்டதாக மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால், வீடு வந்து சேரவில்லை. மேலும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து, மறுநாள் (13ம் தேதி) ராயக்கோட்டை போலீசில் ஷில்பா புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் விசாரித்தனர். அப்போது, சொத்து வாங்குவதற்காக பெங்களூரு சென்ற அகமத் மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் நேற்று காலை ஆண் சடலம் கிடப்பதை அறிந்து சேலம் ரயில்வே போலீசார் சென்று விசாரினர். அப்போது சடலமாக கிடந்தது மாயமான அகமத் என்பதும், தலையின் பின்பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, தண்டவாளத்தில் வீசியிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவரது உடலில் பல இடங்களில் ரத்தக்கறை இருந்தது. இதுகுறித்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். காதல் திருமணம் செய்த  அகமத்துக்கு, குடும்பத்தினருடன் பிரச்னை இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அவர் பெங்களூருவில் ₹1.5 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
மேலும், வேறு ஒரு சொத்தை வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். இந்நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 12ம் தேதி மாயமான அவர், நேற்று  காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடலில் இருந்த காயங்களை வைத்து பார்க்கும்போது நேற்று முன்தினம்தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதன்மூலம் கடந்த 12ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, அவரை சிறை வைத்து சித்ரவதை செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா அல்லது சொத்தை அபகரிக்கும் முயற்சியில் கொலை நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Chennai engineer,abducted , death, Krishnagiri
× RELATED கிருஷ்ணகிரி அருகே மழை வேண்டி ஊரை காலி செய்த மக்கள்