ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்ப மக்களிடம் கையெழுத்து இயக்கம்: மன்னார்குடியில் நடந்தது

மன்னார்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு தபால் அனுப்ப பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் மன்னார்குடியில் நடைபெற்றது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்கள் காவிரி நீரின்றி வறண்டு போயுள்ளது. டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று அனைவரும்  போராடி வரும் நிலையில், மத்திய அரசு பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து  ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் 41 இடங்களில் 274 கிணறுகள்  தோண்டி எரிவாயு எடுப்பதற்கான பணியில் இறங்கி மயிலாடுதுறையில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.  

எரிவாயு வெளியேற்றத்தால் பலவித நச்சுப்பொருட்கள் பூமியின் மேல்தளத்திற்கு வருவதால் புவி வெப்பமடைந்து தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் அபாயகரமான சூழல் உருவாகும். இதனை உணர்ந்து  அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் சார்பில் “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு, காவிரி டெல்டாவை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு என்ற முழக்கக்தோடு வரும் 24ம் தேதி திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு 1 லட்சம் தபால் அனுப்பும் முழக்க போராட்டத்தை அறிவித்துள்ளது.அதன் ஒரு பகுதியாக அனைத்திந்திய  இளைஞர் பெருமன்றத்தின் மன்னார்குடி நகரக்குழு சார்பில் மன்னார்குடி பேருந்து நிலையம், உழவர் சந்தை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களிடம் நகர தலைவர் சார்லஸ் தலைமையில்  கையெழுத்து பெற்றனர். நிகழ்ச்சியில் இளைஞர்  பெருமன்ற  மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் கலந்து கொண்டு  கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

Related Stories: