ஓஎன்ஜிசிக்கு தடை விதிக்ககோரி 26ம்தேதி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

மன்னார்குடி: காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசிக்கு தடை விதிக்ககோரி வரும் 26ம்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி டெல்டாவில் 2015 முதல் ஓஎன்ஜிசிக்கு புதிய கிணறுகள் அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கச்சா எண்ணெய் என்கிற பெயரில் ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு எடுக்கும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை ஆய்வு செய்து காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசிக்கு தடை விதித்திட தமிழக அரசு முன் வரவேண்டும்.

இதனை வலியுறுத்தி வரும் 23ம் தேதி காலை 10 மணியளவில் தமிழக அரசின் வனம் மற்றும் சுற்று சூழல் துறை முதன்மை செயலாளர்  சம்பு கல்லோலிக்கரை தலைமை செலகத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். இத்திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்றம் முன் வரும் 25ம் தேதி உண்ணாவிரதமும், 26ம் தேதி முற்றுகைப் போராட்டமும் நடத்த  உள்ளோம். உண்ணாவிரதப் போராட்டத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்து பங்கேற்கிறார். இதில்  தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் பங்கேற்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Tags : 26th Parliamentary ,Siege Struggle, Ban ONGC, Interview,BR Pandian
× RELATED இலவச அரிசி வாக்குறுதி...