மார்த்தாண்டத்தில் காவலாளியை மர்ம நபர்கள் கட்டி போட்டு கூட்டுறவு சங்கத்தில் புகுந்து வாக்குசீட்டுகள் தீ வைத்து எரிப்பு

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் உள்ள தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க தேர்தலில் பதிவான வாக்குசீட்டுகளை மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுவெந்நியில் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்னும் இரு தினங்களில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். சங்க அலுவலகத்தில் முஞ்சிறையை சேர்ந்த கனகராஜ் (58) என்பவர் காவலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவும் பணியில் இருந்தார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் 4 பேர் வந்தனர். அலுவலக வாசல் அருகே உள்ள ஒரு அறையில் இருந்த கனகராஜின், பின்புறமாக சென்று அவரது கண்கள் மற்றும் வாயை துணியால் கட்டி தாக்கினர். பின்னர் அவரை அலுவலகத்தின் பின்னால் உள்ள  மரத்தில் கட்டி வைத்தனர்.

அதன்பின்னர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, வாக்கு பெட்டி அறையில் உள்ள கேமராவை உடைத்தனர்.  பின்னர், வாக்கு பெட்டியை வெளியே தூக்கி வந்து உடைத்து வாக்கு சீட்டுகளை கிழித்து தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவம் குறித்து நீண்ட நேரத்துக்குபின் வெளியே தெரிந்தது. பொதுமக்கள் சிலர், காவலாளியை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மார்த்தாண்டம் போலீசாருக்கும், கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.மார்த்தாண்டம் போலீசார், கூட்டுறவு சங்க அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் உடைப்பதற்கு முன், சில காட்சிகள் பதிவாகி இருந்தது. இதன்பேரில் 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கையை நடத்த விடக்கூடாது என்ற எண்ணத்தில் மர்ம நபர்கள் இந்த செயலை செய்துள்ளனர் என போலீசார் கூறினர்.

Related Stories: