போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை அமைப்பதற்காக மக்கள் மனமுவந்து நிலத்தை தர வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம்: மக்கள் மனமுவந்து நிலத்தை கொடுத்தால்தான் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை அமைக்க முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில், ₹24.10 கோடியில் அமைக்கப்பட்ட புதிய புறவழிச்சாலை திறப்பு விழா நேற்று நடந்தது. சாலையை திறந்து வைத்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:தொழில்வளம் சிறக்க, சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் முக்கியமானது. இந்தியாவிலேயே சாலை பராமரிப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. சாலை அமைக்கும் போது, நிலம் எடுப்பதில் பல்வேறு பிரச்னை உள்ளது. மக்கள் மனமுவந்து நிலம் கொடுத்தால்தான் இதுபோன்ற சாலை அமைத்து, விபத்து, உயிர்ச்சேதம், பயண நேரத்தை குறைக்க முடியும். எரிபொருள் மிச்சமாகும். போக்குவரத்து நெரிசலை குறைப்பது தான் எங்கள் லட்சியம்.சேலத்தில் விரைவில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக இரும்பு ஆலையில் நிலம் ஒதுக்க மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை அமைந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நீர் மேலாண்மை திட்டம் மிக முக்கியம். விவசாயத்திற்கும், குடிக்கவும் பாதுகாப்பான குடிநீர் அவசியம். குடிமராமத்து திட்டத்தை விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் நிறைவேற்றி வருகிறோம். ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் குளிர்பதன கிடங்கு, விவசாயிகள் ஓய்வறை, வியாபாரிகளுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.100 ஏரிகளை நிரப்ப ரூ.565 கோடி: சேலம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் விழா இடைப்பாடியில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 21,495 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் பணியையும், பல்வேறு துறை சார்பில் ₹1.91 கோடியில் முடிவுற்ற 11 பணிகளையும் தொடங்கி வைத்து பேசியதாவது:மேட்டூரில் இருந்து வெளியேறும் உபரிநீரை, நீரேற்று முறையில் 100 ஏரிகளில் நிரப்ப ₹565 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மேட்டூர், சங்ககிரி, இடைப்பாடி மற்றும் ஓமலூர் ஆகிய 4 தொகுதி மக்கள் பயன்பெறுவார்கள். அப்பகுதிகளில் விவசாயம் செழித்து, நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

 

சேலம்-திருப்பத்தூர் சாலை விரிவுபடுத்தப்படும். அயல்நாடுகளில் உள்ளது போல, கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கங்கையை போல காவிரியை சுத்தம் செய்ய தேவையான நிதியை வழங்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அதனை குடியரசு தலைவர் உரையிலேயே இடம்பெறச் செய்தார்கள். ஓய்வுபெற்ற 5 பொறியாளர்களை நியமித்து, வீணாகும் நீரை தடுப்பணை போன்ற திட்டம் மூலம் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்காக அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் கல்லாதவர் இல்லாத நிலை உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அத்திவரதர் சிலையை இடம் மாற்ற பரிசீலனை

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:  காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலையை இடமாற்றம் செய்வது குறித்து, உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பக்தர்கள் எந்தவித இடையூறுமின்றி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றமே அதனை ஏற்றுக் கொண்டுள்ளதால், அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும். அணை பாதுகாப்பு மசோதாவுக்கு அதிமுக உறுப்பினர்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்ற முடியாத நிலையை உருவாக்கினர். நம்முடைய அணையை நாமே பராமரிக்க திருத்தம் கொண்டு வர வலியுறுத்துவோம். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Related Stories: