மெட்ரோ ரயிலை போல் சிறு நகரங்களில் இயக்க ‘மெட்ரோ லைட்’ ரயில்: மத்திய அரசு பரிந்துரை

புதுடெல்லி: பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் இருப்பதைப் போல, சிறு நகரங்களில் குறைவான பெட்டிகள் கொண்ட இலகுரக ‘மெட்ரோலைட்’ ரயிலை இயக்கலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில் நவீன வசதிகளுடன், குளிர்சாதன வசதி கொண்ட மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவை மேலும் 50 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என பாஜ தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், சிறு நகரங்களில் ‘மெட்ரோலைட்’ எனப்படும் இலகுரக ரயில் சேவையை கொண்டு வரலாம் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்பு அமைச்சகம் தற்போது பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக, ‘மெட்ரோலைட்’ ரயில் சேவை குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரத்தில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள மெட்ரோ ரயில் சேவையை விட குறைவான செலவில் ‘மெட்ரோலைட்’ ரயில் சேவையை தொடங்கலாம். இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கும். ‘மெட்ரோலைட்’ ரயில் 3 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். இதில், 300 பயணிகள் வரை பயணிக்க முடியும். நிலப்பரப்பு மற்றும் மேம்பாலத்தில் ரயிலை இயக்கலாம்.

அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்திலும், குறைந்தபட்சமாக 25 கிமீ வேகத்திலும் ரயில் இயக்கப்படும். இரு சாலைகளின் நடுவில் இந்த ரயில்கள் செல்லும் வகையில் ஒரே தடத்திலும் தண்டவாளம் அமைகலாம். இதில், மெட்ரோ ரயில் நிலையத்தை போல அதிநவீன வசதிகள் இருக்காது. டிக்கெட் பரிசோதனை கருவிகள் ரயிலுக்குள்ளேயே பொருத்தப்படும். செல்லத்தக்க டிக்கெட் இல்லாத பயணிகளிடம் அபராதம் கடுமையாக வசூலிக்கப்படும்.சாலையின் சென்டர்மீடியன் பகுதியிலோ, சாலையின் பக்கவாட்டிலோ தண்டவாளம் அமைக்க ஏதுவான இடவசதி இல்லாத இடங்களில் மேம்பாலங்கள் அமைத்து ரயிலை இயக்கலாம். இது சாலையில் ஏற்படும் நெரிசலை குறைப்பதோடு, பயனுள்ள போக்குவரத்துக்கு வசதியாகவும் அமையும். இதற்கான வழித்தடங்களை அமைக்க சாத்தியமான பாதைகளை நகராட்சி நிர்வாகங்கள்் அடையாளம் காணும்.

Tags : Metro light rail,train,operate , small towns ,metro rail
× RELATED வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே ஏப்ரல் மாதம் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்