ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் லிப்ட்கள் பழுதால் நோயாளிகள் அவதி

பெரம்பூர்: வண்ணாரப்பேட்டை தங்கசாலை அருகில்  ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, தினசரி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும்  சிகிச்சை பெறுகின்றனர். சென்னை, புறநகர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள 8 மாடி கட்டிடத்தின் முதல் இரண்டு மாடிகளில் அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளன. அதை தொடர்ந்து முதலமைச்சரின் காப்பீடு திட்ட அலுவலகம், மீதமுள்ள மாடிகளில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு வரும் நோயாளிகளின் வசதிக்காக  4 லிப்ட்கள் உள்ளன. இதில் 2 லிப்ட்கள்  மட்டுமே  இயங்கி வந்தது.

தற்போது அதிலும் ஒன்று பழுதடைந்துள்ளதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். 8 மாடி கட்டிடத்துக்கு ஒரு லிப்ட் மட்டுமே செயல்படுவதால், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே, பழுதடைந்துள்ள லிப்ட்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: