எண்ணூர் பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து சேவை திடீர் குறைப்பு: பயணிகள் அவதி

திருவொற்றியூர்: எண்ணூர் பேருந்து நிலையத்தில் இருந்து  கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட சென்னை நகரில் பல இடங்களுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் எண்ணூரை சேர்ந்த  மாணவ, மாணவர்கள், தொழிலாளர்கள், அலுவலர்கள் என  தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணிகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக இந்த பேருந்துகள் எண்ணிக்கையை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் படிப்படியாக குறைத்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போதிய பேருந்து வசதியின்றி  ஷேர் ஆட்டோக்கள் மூலம் சென்று வர வேண்டிய அவல நிலை உள்ளது. குறிப்பாக கோயம்பேடு, வள்ளலார் நகர், தாம்பரம் போன்ற இடங்களுக்கு இயக்கப்பட்ட பல பேருந்துகள் குறைக்கப்பட்டதோடு ஒரு  சில வழிதடங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

Advertising
Advertising

 எனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் மாநகர போக்குவரத்து அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘எண்ணூரில் இருந்து தினமும் சுமார் 63 பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு  இயக்கப்பட்டன. ஆனால், தற்போது அதில் சுமார் 25 சதவீத பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விடியற்காலை மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எண்ணூரில் இருந்து மணலி வழியாக கோயம்பேடு செல்லும் பேருந்துகளும் குறைக்கப்பட்டதால் அதிகாலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செல்லும் பொதுமக்களும், சிறுவியாபாரிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டால் ஓட்டுனர், நடத்துனர், பணிமனை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பேருந்துகளை முழுமையாக இயக்க முடியவில்லை என்று கூறுகின்றனர். எனவே மாநகர போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: