1 லட்சம் மாமூல் கேட்டு கம்பெனி மேலாளரை கடத்தியவர் கைது: 5 பேருக்கு வலை

ஆலந்தூர்: கிண்டி ஐந்து பர்லாங் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் மேலாளராக வேலை பார்த்து வருபவர் உமாபதி.  இவர், நேற்று  பணியில் இருந்த போது, அங்கு வந்த 6 பேர்  கொண்ட கும்பல், உமாபதியை கடத்தி சென்று அருகிலுள்ள முட்புதரில் வைத்து ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து இந்த நிறுவனத்தின் மற்றொரு பொது மேலாளர் கிண்டி காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம்  தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில்,  கிண்டி போலீசார்  உடனே சம்பவ இடத்துக்கு வந்தபோது அந்த 6 பேரும் உமாபதியை அங்கேயே விட்டு விட்டு தப்பினர்.உமாபதியை மீட்ட போலீசார், இதுதொடர்பாக வழக்கு பதிந்து தப்பியோடிய 6 பேரில்  மேற்கு மாம்பலம் அண்ணாமலை தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பரை மட்டும் கைது செய்தனர்.  கிண்டி மடுவின்கரை நரசிங்கபுரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் உள்பட  மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட  சீனிவாசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

* பெருங்குடி பிஎஸ்என்எல் குடியிருப்பை சேர்ந்த காமேஷ்வரன் (19), வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் கல்லூரி அருகே பைக்குடன் நின்றிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் அவரை தாக்கி, அவரது பைக்கை பறித்து சென்றனர். விசாரணையில், அதே கல்லூரியில் பி.ஏ 3ம் ஆண்டு படித்து வரும் வசந்தகுமார் (19), அவரது நண்பர்கள் வேளச்சேரி நேரு நகரை சேர்ந்த மோகன் (21), காமராஜர்புரத்தை சேர்ந்த நவீன் (19) ஆகியோர், காமேஷ்வரனை தாக்கி பைக்கை பறித்து சென்றதும், பல இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

* செம்பியம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஓட்டேரி மேட்டுபாளையத்தை சேர்ந்த நரசிம்மன் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* மாதவரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மாதவரம் பொன்னியம்மன் மேடு விபிசி நகரை சேர்ந்த அருண்குமார் (23), பிரதீப்குமார் (25), நவின்குமார் (27), சூர்யா (23), விஜய் (26), பாலமுருகன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த பெரியமேட்டை சேர்ந்த ஷான்பாஷா (42), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டு செல்போன்களை வாங்கி விற்பனை செய்த புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஹரிசுதன் (27) என்பவரையும் கைது செய்தனர்.

Related Stories: