நடிகர் சூர்யாவின் மனிதாபிமான கல்வி அறப்பணிகள் பாராட்டத்தக்கவை: வைகோ அறிக்கை

சென்னை: கலைத்துறையில் ஒளிரும் நட்சத்திரம் நடிகர் சூர்யாவின் மனிதாபிமான கல்வி அறப்பணிகள் புகழின் உச்சம் என்று வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய நாட்டினுடைய பன்முகத் தன்மையைச் சிதைத்து, சமூக நீதிக்குக் கொள்ளி வைத்து, ஏழை எளிய, தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சூன்ய மயமாக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு கலை உலகின் ஒளிவிடும் நட்சத்திரமான சூர்யா தனது நியாயமான எதிர்ப்பைப் பதிவு செய்தார். சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள் நடிகர் சூர்யாவை ஆதரித்து குரல் தந்தபோது நான் மகிழ்ந்தேன். ஸ்டெர்லைட் மற்றும் தேசத் துரோக வழக்குகளின் பணிச் சுமையால் நடிகர் சூர்யாவை ஆதரித்து உடனே அறிக்கை தரும் கடமையில் தவறிவிட்டது என் மனதைக் காயப்படுத்துகிறது. நடிகர் சூர்யாவின் விளக்கத்தைப் பத்திரிகைகளில் படித்தபோது, அவரது மனிதாபிமானப் பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன். கலை உலகில் வெள்ளித் திரையில் ஒளிவிடும் நட்சத்திரம், அன்னை தெரசா போன்றவர்கள் செய்த தியாகப் பணியின் சாயல் சூர்யாவின் ‘அகரம் பவுண்டேசனி’ல் திகழ்வதை எண்ணி மிகவும் பரவசம் அடைந்தேன்.

அகரம் நிறுவனம் மூலம் செய்த பணிகளை அவர் விளம்பரப்படுத்திக்கொண்டது இல்லை. பிறர் அறியமாட்டார்கள். அந்த உயர்ந்த சேவையை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன். போற்றுதலுக்குரிய சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ்ச் சமூகத்திற்கு தோள் கொடுத்து உயர்த்துவார்கள் எனப் பாராட்டுகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன்: நடிகர் சூர்யா நீட் தேர்வு மற்றும்  தேசிய கல்வி கொள்கை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியது வரவேற்கக்கூடிய  ஒன்று. அது சமூக அக்கறையோடு கூடிய ஒன்று. கட்சி சார்பற்ற நடிகர் சூர்யா  கூறியுள்ள கருத்தை பாஜகவினர் வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், அதை  பொறுத்துக்கொள்ள முடியாமல் பலர் அவருக்கு எதிராக பேசி வருவது  கண்டனத்திற்குறியது.

Tags : Actor Surya, humanitarian,Commendable,Vaiko
× RELATED அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகள் 10...