×

தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு சந்திராயன்-2 இன்று பாய்கிறது: 48வது நாளில் நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள துவங்கும்

சென்னை: நிலவின் தென்துருவத்தை ஆராயும் சந்திராயன்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம்  இன்று பிற்பகல் 2.43 மணிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இதற்கான 20 மணி நேர கவுன்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. பி.எஸ்.எல்.வி-சி 11 ராக்கெட் மூலம் சந்திராயன் - 1 விண்கலம் கடந்த 2008ம் ஆண்டு நிலவிற்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் நிலவின் தரை பகுதியில் இருந்து 100 கி.மீட்டர் உயரத்தில் நிலவை சுற்றி வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டது. அப்போது நிலவில் உள்ள சூழல்கள், கனிமங்கள் இருப்பதை கண்டறிந்தது. நிலவை சுற்றியவாறு மொத்தம் 312 நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்த இந்த விண்கலம் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் தன்னுடைய ஆயுள் காலத்தை முடித்துக்கொண்டது. இந்தநிலையில், நிலவில் தரை இறங்கி அதன் தென் துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து வந்தனர். இதற்கான பணிகளானது கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு சந்திராயன்-2 விண்கலத்தை நிலவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து கடந்த 15ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராக இருந்தனர். இந்தநிலையில், ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு 54 நிமிடங்கள் 24 வினாடிகள் இருந்த போது ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்டவுன் திடீரென நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.  

தற்போது தொழில்நுட்ப கோளாறு அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்ட நிலையில் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு ஆந்திரமாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திராயன்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 20 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. ஏற்கனவே, 54 நாட்கள் விண்கலத்தின் பயண நாட்கள்  இருந்தது. தற்போது அதை 48 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் செப்டம்பர் முதல் வாரத்தில் சந்திராயன்-2 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். 48வது நாளில் சந்திராயன் -2 நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியதும் ரோவர் கலன் சோலார் சக்தியின் மூலம் மெல்ல நகர்ந்து தன்னுடைய ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். மேலும், நிலவில் உள்ள தாதுக்கள், தரை அதிர்வுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அதுகுறித்த படங்களை தினம் தோறும் அனுப்பி வைக்கும். ஆர்பிட்டர் விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி ஆய்வு செய்யும். இதன் ஆயுட் காலம் 1 வருடம் ஆகும். மேலும், லேண்டர், ரோவர் ஆகிய இரண்டும் நிலவில் 14 நாட்கள் ஆய்வு செய்யும்.

13 வகையான அதிநவீன கருவிகள்
சந்திராயன்-2 விண்கலம் மூன்று பகுதிகளை கொண்டது. இதில், நிலவில் தரையிறங்க  ‘லேண்டர்’ கலனும், சுற்றுவட்டப்பாதையில் ஆய்வு செய்ய செயற்கைக்கோள் போன்ற ‘ஆர்பிட்டர்’ கலனும், நிலவின் மேற்பரப்பை ஆராய ‘ரோவர்’ என்ற வாகனத்தையும் கொண்டுள்ளது. இதில், ஆர்பிட்டர் 2,379 கிலோ எடையும், லேண்டர் 1,471 கிலோ எடையும், ரோவர் 27 கிலோ எடையும் கொண்டது. இந்த மூன்றிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், லேசர் தொழில்நுட்ப கருவிகள் என 13 வகையான கருவிகள் உள்ளன. இதில், ரோவர் பகுதி லேண்டர் அமைப்புக்குள்ளும், லேண்டர் ஆர்பிட்டருக்குள்ளும் வைக்கப்பட்டு ராக்கெட்டிற்குள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Tags : Chandrayaan-2,flows , technical problems , corrected
× RELATED பொன்னை அருகே நான்கு ரோடு பகுதியில்...