×

முழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்

புதுடில்லி: மாரடைப்பால் காலமான டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. டெல்லியில் 1998ம் ஆண்டு தொடங்கி 2013ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை முதல்வராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். அவருக்கு வயது 81. உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஒக்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அவரை சேர்த்தனர். அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தது.

அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை சீரடையத் தொடங்கியது. எனினும், மதியம் மறுபடியும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து, டாக்டர்கள் தீவிரமாக முயற்சித்தும் பலனின்றி மதியம் 3.55 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. டெல்லியின் இரும்பு பெண்மணி என்று ேபாற்றப்பட்ட ஷீலாவின் மரணம் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஷீலா தீட்சித்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து அவரது உடல் நிஜாமுதீனில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்களும், கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் குவிந்தனர். மாநிலத்தில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என துணை முதல்வர் சிசோடியா கூறியுள்ளார். இன்று, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் வெளியறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஷீலா தீட்ஷித் உடல், அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் , அலங்கரிக்கப்பட்ட, டெல்லி அரசுக்கு சொந்தமான வாகனத்தில், யமுனை நதி ஆற்றங்கரையோரத்தில் உள்ள நிகாம் போத் மயானத்திற்கு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து, ஷீலா தீட்ஷித் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா, காங்., பொது செயலர் பிரியங்கா மற்றும் காங்., மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Full Government honors, Sheila Dixit, cremation
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...