பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

பெங்களூரு: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடக்கிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 1ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த்சிங் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம்  கொடுத்த நாள் முதல், அரசியல் குழப்பம் தலை தூக்கியது. தினமும் ஏதாவது ஒரு பிரச்னை பகிரங்கமாகி மீடியாக்களை ஆக்ரமித்து வருகிறது. இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.  இதனால், கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா செய்ததால், பெரும்பான்மையை இழந்துள்ள முதல்வர் குமாரசாமி பதவியை  ராஜினாமா செய்யவேண்டும் என பாஜ மாநில தலைவர் எடியூரப்பா வலியுறுத்திவந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 20 நாட்களாக மாநில அரசியலில் நிலவும் பரபரப்பான நிகழ்வுகள் குறித்த விரிவான அறிக்கையை ஆளுநர் வஜுபாய் வாலா மத்திய உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.அதில், கடந்த 12ம் தேதி  சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் நேற்று முன்தினம் வரை அவையில் நடந்த விவாதங்கள். கடந்த 18ம் தேதி முதல்வர் குமாரசாமி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் தாக்கல் செய்தது, அதன் மீது நடந்து  வரும் விவாதம், நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் தவிர்த்து வருவது தொடர்பாக பாஜ சார்பில் தன்னிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜூலை 19ம் தேதி பகல் 1.30 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தக்கோரி  முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதியது, அதை செயல்படுத்தாமல் அலட்சியப்படுத்தியதால் மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இரண்டாவது நினைவூட்டல் கடிதம் முதல்வருக்கு எழுதியது,

ஆனால், தனது கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அலட்சியப்படுத்தியது மட்டுமில்லாமல், தனது (ஆளுநர்) அதிகாரம் தொடர்பாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவையில் எழுப்பிய கேள்விகள் தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட  பல்வேறு தகவல்களை கவர்னர் தனது அறிக்கையில் விரிவாக குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும், மாநில சட்டப்பேரவையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் ஆளும் கூட்டணியில் 15 எம்எல்ஏக்கள் மற்றும் 2  சுயேச்சைகள் ஆதரவு குறைந்துள்ளதன் மூலம் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடக்கிறது. இதனால் அரசு இயந்திரம் கடந்த 20 நாட்களாக எந்தெந்த வகையில் முடங்கியுள்ளது என்ற விவரத்தையும் ஆளுநர் தனது அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அக்கட்சி அறிவித்துள்ளது.  இதற்கிடையே, கர்நாடக சட்டப்பேரவை 2 நாள் விடுப்புக்கு பின்னர் நாளை மீண்டும் கூடுகிறது. அப்போது, முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதம் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அதைத்  தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: