மருத்துவக்குழுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: அத்திவரதர் தரிசனம் குறித்து தலைமைச் செயலர் சண்முகம் விளக்கம்

காஞ்சிபுரம்: ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,000 தொண்டர்கள் பக்தர்களை ஒழுங்குப்படுத்துவார்கள் என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதர் பெருவிழா கடந்த  ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது. கடந்த 17 நாள்களில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். தொடர்ந்து 21ம் நாளில்  அத்திவரதர் ரோஸ் நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே, அத்திவரதரை தரிசிக்க வந்த  7 பேர், கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி மயங்கி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை  நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன்  மார்டி, சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் அபூர்வ வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர்சிங், பொதுப்பணித்துறை செயலாளர்  பிரபாகர், போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பனீந்திரரெட்டி, தமிழக டிஜிபி திரிபாதி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா  மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்துமாறு, முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் டிஜிபி திரிபாதி கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, பேசிய தமிழக செயலாளர் சண்முகம், அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை  அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அத்திவரதர் உற்சவத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் விளக்கம் அளித்தார். ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,000 தொண்டர்கள்  பக்தர்களை ஒழுங்குப்படுத்துவார்கள் என்றும் மருத்துவக்குழுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், அத்திவரதரை தரிசித்துவிட்டு வெளியில் வரும் பக்தர்களுக்கு மருத்துவக்குழு உதவும் என்றார். தளர்ச்சியுடன் வரும்  முதியோர்களுக்கு பழச்சாறு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் துப்புறவு தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் துப்புரவு பணி இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 3  மணி வரை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலர் சண்முகம் கூறியுள்ளார்.

டிஜிபி திரிபாதி கூறுகையில், அத்திவரதர் உற்சவத்திற்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories: