கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு: கேஆர்எஸ் அணையில் வினாடிக்கு 4,922 கனஅடி நீர் திறப்பு

ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து மழை காரணமாக காவிரியில் நேற்று 8,300 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கல்  வரத்தொடங்கியுள்ளது. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து கடந்த 16ம் தேதி விநாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நீர் நேற்று முன்தினம் தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவை  வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தண்ணீர் வந்து சேரவில்லை. இதற்கிடையே, கேஆர்எஸ் அணையில் இருந்து நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் படிப்படியாக  அதிகரிக்கப்பட்டு நேற்று விநாடிக்கு 4,800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினியில் இருந்து நேற்று விநாடிக்கு 3,500 கனஅடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர்  நேற்று அதிகாலை பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 200 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 1000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து படிப்படியாக  உயர வாய்ப்புள்ளது. இந்த தண்ணீர் நாளை (இன்று) அதிகாலை மேட்டூர் அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளோம்’ என்றனர்.  மேட்டூர் அணையில் நேற்று முன்தினம் 39.91 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 39.59 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 11.88 டிஎம்சி.

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று விநாடிக்கு 4,800 கனஅடி தண்ணீர் திறந்து விட்ட கேஆர்எஸ் அணையில் இருந்து இன்று வினாடிக்கு 4,922 கன அடி நீர்  திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 3,458 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் வினாடிக்கு 8 ஆயிரத்து 380 கனஅடி காவிரி நீரானது தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை:

மேட்டூர் அணையில் இன்று 39.28 அடியாக நீர்மட்டம் உள்ளது. நீர் இருப்பு 11.72 டிஎம்சி-யும், நீர்வரத்து - 233 கனஅடியாகவும் உள்ளது. நீர் திறப்பு - 1000 கனஅடியாக உள்ளது.

பவானிசாகர் அணை:

பவானிசாகர் அணையிலிருந்து காவிரி டெல்டா பகுதி குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் கடந்த 14-ம் தேதி மாலை முதல் கூடுதலாக திறக்கப்பட்ட 800 கன அடி தண்ணீர் இன்று காலை நிறுத்தப்பட்டது. தற்போது, அணை நீர்மட்டம் -58.36  அடியாக உள்ளது. நீர்இருப்பு -6.7 டிஎம்சி, நீர்வரத்து -174 கனஅடி, நீர் வெளியேற்றம் -205 கனஅடியாகவும் உள்ளது.

Related Stories: