×

ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி: 15 நாள்களுக்குள், 4 தங்கம் வென்று ஹீமா தாஸ் அசத்தல்

டோக்கியா: 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற இந்திய வேகப்புயல் ஹீமா தாஸ் 15 நாள்களுக்குள், 4 தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்றுகள் தொடங்கியுள்ள நிலையில், ஹீமா தாஸின் இந்த அதிரடி ஃபார்ம் அவரை ஒலிம்பிக் தேர்ச்சிக்குப் பக்கத்தில் அழைத்துச் சென்றுள்ளது. இந்த ஆண்டின் முதல் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்ற ஹீமா தாஸ், 200 மீட்டர் ஓட்டத்தில் 23.65 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். முதல் போட்டியைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ள அவர், ஒவ்வொரு முறையும் நேர அளவை குறைத்துக்கொண்டு ஓடினார். கடைசியாக செக் குடியரசில் நடைபெற்ற தாபோர் தடகளத்தில் பங்கேற்ற அவர், 23.25 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து அசத்தினார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் விளையாடி வரும் ஹீமா தாஸ், ஒலிம்பிக் குவாலிஃபையரில் தேர்ச்சி பெற தேவையான ரெக்கார்டை நெருங்கியுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்ச்சி பெற, 200 மீட்டர் ஓட்டத்தை 23.02 விநாடிகளிலும், 400 மீட்டர் ஓட்டத்தை 51.80 விநாடிகளிலும் கடக்க வேண்டும். 200 மீட்டர் ஓட்டத்தில் ஹீமா தாஸின் சிறந்த ரெக்கார்டு டைமிங் - 23.10. கடந்த 2018-ம் ஆண்டு இந்த டைமிங்கை அவர் எட்டினார். இந்த ஆண்டு பங்கேற்ற போட்டிகளில் 23.25 எட்டியுள்ள அவர், ஒலிம்பிக் போட்டிக்கான தேர்ச்சிக்கு முன், குறைந்த நேரத்தில் 200 மீட்டர் தூரத்தை கடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

200 மீட்டரில் கலக்கி வரும் ஹீமா தாஸ், 400 மீட்டர் ஓட்டத்திலும் ஆரம்பத்தில் முத்திரை பதித்திருந்தார். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அவர், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றபோது இந்திய தடகளத்தில் பரிச்சயமான முகமானார். U20 உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில், 400 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். இரண்டு பிரிவுகளிலும் பதக்கங்களைக் குவித்து வரும் ஹீமா, இந்தியாவின் ஒலிம்பிக் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து சர்வதேச ஓட்டப்பந்தய போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் ஹீமா தாஸுடையது. கடந்த 15 நாள்களாக தங்கப்பதக்க மழை பொழிந்து வரும் ஹீமாவுக்கு அந்த வெற்றிகளைக் கொண்டாட மனமில்லை. காரணம், 15 நாள்களாக அஸ்ஸாமில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அஸ்ஸாமில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அஸ்ஸாம் மக்களுக்கு உதவ முன்வந்துள்ள ஹீமா, தனது ஒரு மாத சம்பளத்தில் பாதியை அஸ்ஸாம் வெள்ள நிவாரணத்துக்காக அளித்துள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மக்களுக்கு உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

200 மீ ஓட்டத்தில் ஹீமா தாஸ் வென்ற நான்கு தங்கப் பதக்கங்கள்

* ஜூலை 2 - 23.65 விநாடிகள் - போலந்து போஸ்னான் தடகளம்
* ஜூலை 7 - 23.97 விநாடிகள் - போலந்து புத்னோ தடகளம்
* ஜூலை 13 - 23.43 விநாடிகள் - செக் குடியரசு க்ளாண்டோ தடகளம்
* ஜூலை 17 - 23.25 விநாடிகள்- தாபோர் தடகளம்

Tags : Qualifier for Olympic Games, 4 Gold, Heema Das, Asal
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...