அத்திவரதர் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும்  அத்திவரதர்  பெருவிழா கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது. கடந்த 17 நாள்களில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை  தரிசித்துள்ளனர்.  தொடர்ந்து 21ம் நாளில் அத்திவரதர் ரோஸ் நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே,  அத்திவரதரை தரிசிக்க வந்த 7 பேர், கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி மயங்கி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உடல் தளர்ந்த முதியோர்கள், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் அவர்களை அழைத்து வருவோர், அத்திவரதரை தரிசிக்கும் நிகழ்வை தவிர்க்குமாறு, மாவட்ட ஆட்சியர் பொன்னையா  கேட்டுக்கொண்டார். பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாவதால், தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 4 மணி முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை ஆகும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனை கண்டித்துள்ள முன்னாள் மத்திய  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அத்தி வரதரை தரிசிக்க வரவேண்டாம் என கூற, ஆட்சியருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என கேள்வி எழுப்பினார். இதேபோன்று, அத்திவரதரை தரிசிக்க வந்த பதர்களின் உயிரிழப்பு குறித்து கருத்து  தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டினார்.

மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கும் விவகாரத்தில், சரியான திட்டமிடல் இல்லை எனவும், ஒருநாளைக்கு 20 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என  அறநிலையத்துறை தவறாக கணித்ததாகவும் விமரிசித்தார். இதற்கிடையே, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் எடப்பாடி  பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், தலைமை  செயலாளர் சண்முகம்,

 உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் அபூர்வ வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர்சிங்,  பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பனீந்திரரெட்டி, தமிழக டிஜிபி திரிபாதி, காஞ்சிபுரம்  மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்துமாறு, முதலமைச்சர் உத்தரவிட்டார்.

Related Stories: