மேற்குத்தொடர்ச்சி மலையில் கனமழை சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 16 அடி உயர்ந்தது: ராமநதி அணை 10 அடி உயர்வு

நெல்லை: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 16 அடி உயர்ந்துள்ளது. ராமநதி அணை நீர்மட்டம், 2 நாளில் 10 அடி உயர்ந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆரம்பம் முதலே ஏமாற்றம் அளித்து வந்தது. இதனால் கார் பருவ நெல் சாகுபடிக்கு பாபநாசம் அணை திறக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்ததால் பாபநாசம் அணையின் நீர்மட்டமும் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் கடந்த சில இரு நாட்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையில் 48 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 51.80 அடியானது. விநாடிக்கு 2911 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதியில் 4 மிமீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணையில் 59.78 அடியாக இருந்த நீர்மட்டம், ஒரே நாளில் 16 அடி உயர்ந்து 75.86 அடியானது.

அணை பகுதியில் 3 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 304 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 50.63 அடியாக நீடிக்கிறது. அணைக்கு விநாடிக்கு 7 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை மூடப்பட்டுள்ளது. அணை பகுதியில் 5.6 மிமீ மழை பதிவாகியுள்ளது. ராமநதி அணை நீர்மட்டம், 2 நாளில் 10 அடி உயர்ந்து 50 அடியானது. ஆனால் அணையில் 27 அடிக்கு மணல் குவியல் கிடப்பதால், 23 அடிக்கே நீரிருப்பு உள்ளது.

பிற அணைகளை பொறுத்தவரை கடனா நதியில் 2, கருப்பாநதியில் 1, குண்டாறில் 21, அடவிநயினார் அணையில் 37 மிமீ மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அம்பையில் 4.8 மிமீ, ஆய்க்குடியில் 3.2 மிமீ, சங்கரன்கோவில் 1 மிமீ, செங்கோட்டை 3 மிமீ, சிவகிரி 12 மிமீ, தென்காசியில் 7.3 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மலைப்பகுதிகளில் மழை பெய்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: