ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு வலுக்கிறது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்: திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் நடந்தது

மன்னார்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக டெல்டாவில் வீடு, கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி பொது மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. 2ம் கட்டமாக இந்த கோரிக்கைக்காக கடந்த 12ம் தேதி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் நிறுவன தலைவர் லெனின் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.

3வது கட்டமாக நேற்று மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் ஹைட்ரோகார்பனை ரத்து செய்யக்கோரி கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே காரியமங்கலம் கிராமத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் விவசாயிகள் கிராமத்தில் தங்களின் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மேலும் காரியமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி பிளான்ட் அருகில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் நிறுவன தலைவர் லெனின் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் மற்றும் பலர் கருப்பு கொடி ஏந்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடியிருப்பு பகுதியில் வீடுகள் தோறும் விவசாயிகள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மீனவ கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள கள்ளிவயல்தோட்டம் மீனவர்கள் தங்கள் வீடுகளில் கருப்புகொடி ஏற்றியும், துறைமுகங்களில் தங்கள் கைகளில் கருப்புகொடி ஏந்தியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Related Stories: