தேன்கனிக்கோட்டை அருகே தக்காளி தோட்டத்தை துவம்சம் செய்த யானைகள்: விவசாயிகள் கண்ணீர்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில், அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி நாசமடைந்தது. கர்நாடக மாநிலத்தில் இருந்து உணவு தேடி இடம்பெயர்ந்து வந்த யானைகள், கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளன. இவற்றில் 10க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை அருகே தாவரக்கரை வனத்தில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து, விளைநிலங்களை துவம்சம் செய்து வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு, தாவரகரை அருகே உள்ள கேரட்டி கிராமத்திற்குள் புகுந்த யானைகள், பையப்பா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நுழைந்து பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின. இதில், அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி, வெள்ளரி பயிர் சேதமடைந்தது. இதையடுத்து, கொண்டிகானப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்த யானைகள், அங்குள்ள பிரகாஷ்(38) என்பவருக்கு சொந்தமான தக்காளி தோட்டத்தை துவம்சம் செய்தன. நேற்று காலை விவசாய தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள், இதை கண்டு அதிர்ச்சியடைந்து கண்ணீர் வடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார், வனவர் கதிரவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சேதமடைந்த தோட்டங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். மேலும், உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அப்போது, அட்டகாசம் செய்து வரும் யானைகளை விரட்டியடித்து, விளை நிலங்களை காப்பதோடு, தங்களது உயிருக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

Related Stories: