பிரியங்கா தர்ணா போராட்டம் நடத்தியதில் தவறு இல்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு

கொல்கத்தா: உத்தரப்பிரதேசத்தில் யோகி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து வன்முறைகள் அதிகரித்துள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில்  கடந்த 17ம் தேதி பழங்குடியின விவசாயிகளை அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. நிலத்தில் இருந்து வெளியேற மறுத்த பழங்குடி மக்களை, உப்பா கிராம தலைவர் யாக்யா தத்தின்  ஆதரவாளர்கள் சரமாரியாக சுட்டதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்து வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த புதன்கிழமை  சந்தித்து ஆறுதல் கூறினார்.

Advertising
Advertising

பின்னர், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நேற்று முன்தினம் சோன்பத்ரா சென்ற அவரை, உத்தரபிரதேச போலீசார் மிர்சாபூரில் தடுத்தனர். இதை எதிர்த்து சாலையில் அமர்ந்து தர்ணா செய்த அவரை,  போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், சுனார் விருந்தினர் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, பிரியங்காவை டெல்லிக்கு திரும்பி செல்லும்படி மாவட்ட அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை  சந்திக்காமல் போக மாட்டேன் என அவர் உறுதியாக கூறி விட்டார். அவருக்கு மின்சார வசதி மற்றும் உணவு வசதி செய்து தரப்படாததால், மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே ஆதரவாளர்களுடன் விடிய விடிய தர்ணாவை தொடர்ந்தார்.

இதையடுத்து, நேற்று காலை பிரியங்காவை சந்திக்க விருந்தினர் மாளிகைக்கு வந்த சோன்பத்ரா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 15 பேரை விடுதி வாசலில் போலீசார் தடுத்தனர். பின்னர், சிலரை மட்டுமே பிரியங்காவை சந்திக்க  அனுமதித்தனர். இது தொடர்பாக பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில், ‘‘துயரத்தில் இருந்த 15 பேர் என்னை சந்திக்க வந்திருந்தனர். அவர்களில் சிலர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அப்போது போலீசாரிடம் அவர்களை என்னை சந்திக்க  அனுமதியுங்கள் என கேட்டும் பலரை தடுத்துவிட்டனர். சந்தித்த சிலர் என்னிடம் அவர்களது துயரங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி தண்ணீர் கொடுத்தேன்,’’ மீண்டும் இங்கு வருவேன் என்றார்.இதைத் தொடர்ந்து,  பிரியங்கா தனது போராட்டத்தை கைவிட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் யோகி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து வன்முறைகள் அதிகரித்துள்ள சாடியுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார். இதுவரை வன்முறை மற்றும் கும்பலாக தாக்கிய சம்பவங்களில் 1,100 பேர் உயிரிழந்துவிட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வங்கத்தில் கலவரம் வெடித்தால் பாஜகவினர் உண்மை அறியும் குழுவை அனுப்பி  வைப்பதாக குற்றம் சாட்டிய மம்தா, உத்தரப்பிரதேசத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ் ஒரு குழுவை அனுப்பினால் அக்குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர் என்று குறிப்பிட்டார். பிரியங்கா தர்ணா போராட்டம் நடத்தியதில் தவறு  இல்லை என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்தார்.

Related Stories: