×

டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டம் பரபரப்பான சூப்பர் ஓவரில் திருச்சியை வீழ்த்தியது காரைக்குடி: கேப்டன் அனிருதா அசத்தல்

திண்டுக்கல்: ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டத்தின் பரபரப்பான சூப்பர் ஓவரில், ஐட்ரீம் காரைக்குடி காளை அணி கேப்டன் அனிருதா காந்த் அடுத்தடுத்து 2 சிக்சர் விளாசி வெற்றியை வசப்படுத்தினார்.
என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசியது. ஆதித்யா, அனிருதா இருவரும் காரைக்குடி இன்னிங்சை தொடங்கினர். ஆதித்யா 1 ரன் மட்டுமே எடுத்து விக்னேஷ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சூரியபிரகாஷ் 12 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஆர்.னிவாசன் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியாக விளையாடிய அனிருதா 32 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 58 ரன் (36 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சாய் கிஷோர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். பாப்னா 30, ஷாஜகான் 1 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். கடைசி கட்டத்தில் ராஜ்குமார் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு மிரட்டினார்.

காரைக்குடி காளை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. னிவாசன் 37 ரன் (32 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ராஜ்குமார் 28 ரன்னுடன் (13 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். திருச்சி வாரியர்ஸ் பந்துவீச்சில் சரவண் குமார் 3, விக்னேஷ், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. அரவிந்த், முரளி விஜய் இருவரும் துரத்தலை தொடங்கினர். அரவிந்த் 13 ரன், ஆதித்யா பரூவா 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். மாருதி ராகவ் 22 ரன் எடுத்து லஷ்மண் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய முரளி விஜய் அரை சதம் அடித்தார். விஜய் - கணபதி ஜோடி 4வது விக்கெட்டு 77 ரன் சேர்த்தது. முரளி விஜய் 81 ரன் (56 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), கணபதி 21 ரன் (17 பந்து, 2 பவுண்டரி) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது திருச்சி அணிக்கு பின்னடைவை கொடுத்தது.

கடைசி 8 பந்தில் 16 ரன் தேவைப்பட்டதால் ஆட்டம் பரபரப்பானது. 20 ஓவர் முடிவில் திருச்சி அணியும் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுக்க, போட்டி சரிசமனில் முடிந்தது (டை). மணி பாரதி 7 ரன், கேப்டன் சாய் கிஷோர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் விளையாடிய திருச்சி அணி 6 பந்தில் 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன் எடுத்தது. இதைத் தொடர்ந்து, 6 பந்தில் 12 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை களமிறங்கியது. சாய் கிஷோர் வீசிய ஓவரின் 3வது மற்றும் 4வது பந்தை இமாலய சிக்சர்களாக விளாசிய அனிருதா வெற்றியை வசப்படுத்தினார். ஆட்ட நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.



Tags : TNPL, Trichy, Karaikudi, Captain Anirudha
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...