வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகினார் டோனி: 2 மாதம் ராணுவ சேவை

ராஞ்சி: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், இந்த தொடரில் இருந்து நட்சத்திர வீரர் டோனி விலகியுள்ளார். உலக கோப்பை தொடரின் அரை இறுதியில் நியூசிலாந்திடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறிய இந்திய அணி, அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி செப்டம்பர் 4ம் தேதி வரை நடபெற உள்ள இந்த டூரில் இந்தியா 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.  இந்த போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு மும்பையில் இன்று நடைபெறுகிறது. முன்னதாக, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் 19ம் தேதி கூடி வீரர்களைத் தேர்வு செய்ய இருந்த நிலையில், காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஷிகர் தவான், விஜய் ஷங்கரின் உடல்தகுதி பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான சூழ்நிலையில் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அனுபவ வீரர் டோனி வெஸ்ட் இண்டீஸ்  செல்வாரா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து டோனி விலகியுள்ளதாக கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இது குறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘மூன்று விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறோம். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி இப்போதைக்கு ஓய்வு பெறவில்லை. கிரிக்கெட்டில் இருந்து 2 மாதம் விலகியிருக்க முடிவு செய்துள்ள அவர், ஏற்கனவே உறுதி அளித்திருந்தபடி துணை ராணுவ படைப்பிரிவில் இணைந்து பணியாற்ற உள்ளார். இது குறித்து கேப்டன் கோஹ்லி மற்றும் தேர்வுக் குழு தலைவர் பிரசாத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டோம்’ என்றார்.

டோனி இல்லாத நிலையில், 3 வகை கிரிக்கெட்டிலும் இளம் வீரர் ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது. டெஸ் போட்டிகளில் விருத்திமான் சாஹா ரிசர்வ் கீப்பராக இருப்பார். அடுத்த ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், அதுவரை டோனி அணியில் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories: