பெயர் கெட்டதால் பாகிஸ்தான் புதுமுயற்சி அமெரிக்காவில் ஜிங்...ஜக் தட்ட ஏற்பாடு,..கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறது

இஸ்லாமாபாத்: அமெரிக்க அரசிடமும், மக்களிடமும் தன் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கி, உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக  அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தை பாகிஸ்தான் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்ற பின், பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் அமெரிக்காவுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதனால், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பல்லாயிரம் கோடி நிதியுதவியை கடந்த 2018 ஜனவரி முதல் நிறுத்தி விட்டார். இதனால், பாகிஸ்தானுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப்பை நாளை சந்திக்க இருக்கிறார். டிரம்ப் பதவியேற்று ஏறக்குறைய 4 ஆண்டுகள் முடியும் நிலையில், தற்போதுதான் பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அரசிடமும், அதன் மக்களிடமும் தனது நாட்டை பற்றி ஏற்பட்டுள்ள தவறான எண்ணத்தை மாற்றவும், இவர்களிடம் தனது நட்டை  பற்றி உயர்வான எண்ணத்தை ஏற்படுத்தவும் ‘ஹாலண்ட் அண்ட் நைட்’ என்ற அமெரிக்க நிறுவனத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. இது தொடர்பாக, இந்த நிறுவனத்தின் ஆலோசகர் ரெய்னால்ட்சுடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு இருக்கிறார். இந்த ‘ஜால்ரா’ வேலையை செய்வதற்காக, அந்த நிறுவனத்துக்கு பாகிஸ்தான் அரசு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக குரேஷி கூறுகையில், ``ஹாலண்ட் அண்ட் நைட் நிறுவனம் பாகிஸ்தான் தூதரகத்துடன் இணைந்து செயல்பட்டு, அமெரிக்கா மீது பாகிஸ்தான் வைத்திருக்கும் நல்லெண்ணத்தை திறம்பட எடுத்துரைக்கும்,’’ என்றார். இந்த நிறுவனத்தின் ஆலோசகர் ரெய்னால்ட்ஸ், நியூயார்க் நகரத்தின் முன்னாள் காங்கிரஸ் எம்பி.யாக இருந்தவர். அவர் கூறுகையில், ``எங்கள் நிறுவனத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து, இந்த பொறுப்பை ஒப்படைத்த பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பாகிஸ்தான்-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு, புரிந்துணர்வு தொடர்பாக வலுவான நம்பிக்கையை உருவாக்கும் முயற்சிகளில் எங்கள் நிறுவனம் செயல்படும்,’’ என்று கூறினார்.

சவுதி இளவரசர் உதவி:

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு பாதித்துள்ளது. இந்த உறவை சீராக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஈடுபட்டுள்ளார். இதற்கு, சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் உதவி வருகிறார். டிரம்பின் மருமகன் ஜரேட் குஷ்னருடன் சல்மான் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். அவர் மூலமாகதான், டிரம்ப் - இம்ரான் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தூதர் இல்லத்தில் தங்கல்:

பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், தனது நாட்டில் பல்வேறு செலவுகளை குறைப்பதற்கான சிக்கன நடவடிக்கைகளை இம்ரான் எடுத்துள்ளார். தனது அமெரிக்க பயணத்திலும் இதை அவர் பின்பற்றுகிறார். அமெரிக்காவில் அவர் நட்சத்திர ஓட்டலில் தங்கவில்லை. பாகிஸ்தான் தூதரின் இல்லத்திலேயே தங்குகிறார்.

Related Stories: