தொடரும் கனமழையால் பரிதாபம் கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பரிதாப சாவு: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் குமரி மீனவர்களை தேடும் பணி தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  கனமழைக்கு ஒரே நாளில் மாணவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.  கேரளாவில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை  தீவிரம் அடைந்துள்ளது. இந்த மழை தொடர்ந்து சில நாட்கள் பெய்யும் என்பதால் 22ம் தேதி வரை இடுக்கி, காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 6 மாவட்டங்களில் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு–்ள்ளது. மற்ற பெரும்பாலான மாவட்டங்களிலும் 3 நாட்களுக்கு பலத்த மழை  பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் கொல்லம் அருகே படகு கவிழ்ந்ததில் குமரி மாவட்டம் நீரோடியை சேர்ந்த 5  மீனவர்கள் மாயமாகினர். இதில் ஸ்டான்லி(47), நிக்கோலஸ்(40) ஆகிய 2 பேர் நீந்தி  கரை சேர்ந்தனர். மாயமான  ஜான்போஸ்கோ(46), சகாயம்(32), ராஜூ(50) ஆகிய 3  மீனவர்களையும் தேடும் பணியில் நேற்றும் கடலோர பாதுகாப்பு படை மற்றும்  கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மழை  காரணமாக கேரளாவில் பம்பை ஆறு உள்பட பெரும்பாலான ஆறுகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழைக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பேர்  பலியானார்கள்.  கண்ணூர் மாவட்டம் தலச்சேரியைச் சேர்ந்த அஸ்சலம் மகன்  அத்னான்(17). இவர் பிளஸ்2 படித்து வந்தார்.   பள்ளிவாசல் குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி இறந்தார்.  இதுபோல்  பத்தனம்திட்டாவில் மணிமலையாற்றில் மீன்பிடிக்க சென்ற கோசி(54) ஆற்றில்  மூழ்கி இறந்தார். கொல்லத்தில் பலத்த காற்றில் தென்னை மரம் சாய்ந்து  விழுந்ததில் திலீப்குமார்(54) என்பவர் மரணமடைந்தார். கோட்டயம் மீனச்சில்  ஆற்றில் வந்த மரத்தடியை பிடிக்க முயன்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்து  செல்லப்பட்டார். காசர்கோடு மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை  அளிக்கப்பட்டது.

திருவனந்தபுரம், எர்ணாகுளம்  உள்பட பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பலத்த மழையால்  கண்ணூர், கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம்  புகுந்துள்ளது.

கனமழையால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் கொன்னத்தடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. கோட்டயத்தில் கனமழையால் மணிமலையாற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. புனலூர்- மூவாற்றுபுழா சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காசர்கோடு மாவட்டம் குடுலுவில் 306.6 மி.மீட்டர் மழை பெய்தது. ஹோஸ்துர்க் பகுதியில் 277 மி.மீட்டர் மழையும், கண்ணூரில் 218. மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

Related Stories: