பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சமாக பெற்ற 7 லட்சத்தை கைமாற்றிய 2 அதிகாரிகள் சிக்கினர்: போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர்: பல்லடத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சமாக பெற்ற ரூ.7 லட்சத்தை கைமாற்றிய இரண்டு அதிகாரிகள் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் பாலமுருக பிரபாகர். நேற்று முன்தினம் இவரிடம் புரோக்கர் ஒருவர் லஞ்சம் பணம் கொடுக்க இருப்பதாக திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தட்சணாமூர்த்தி மற்றும் போலீசார், சார் பதிவாளர் அலுவலகம்அருகே மறைந்து நின்று கண்காணித்தனர். மாலை 6 மணிக்கு ஒருவர் பையுடன் வந்தார். பின்னர் அவர், பாலமுருக பிரபாகரிடம் பணத்தை கொடுத்தபோது மறைந்து நின்று லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளர் மற்றும் புரோக்கரை கையும், களவுமாக பிடித்தனர். விசாரணையில் புரோக்கர் பெயர், திருப்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்றும், 7 லட்சத்தை, பாலமுருக பிரபாகரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.7 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த லஞ்ச பணம் குறித்து இருவரிடமும் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:  திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த ஒருவர் இணை சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். அவர் ஒரு மாதம் விடுப்பில் சென்று இருப்பதால் சக்திவேல் என்பவர் இணை சார் பதிவாளர் பொறுப்பை கவனித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வசூல் செய்த லஞ்ச பணத்தில் விடுப்பில் சென்ற அதிகாரிக்கு சேர வேண்டிய பங்கு தொகை ₹7 லட்சம் என்றும், அதனை புரோக்கர் பாலகிருஷ்ணனிடம் சக்திவேல் கொடுத்து, அதை பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பாலமுருக பிரபாகரிடம் தருமாறு பணித்துள்ளார்.  அதனை பெறும் பாலமுருக பிரபாகர் வேறு ஒருவர் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பணத்தை சேர்த்து விடுவார். ஆனால், பணத்தை தரவந்த போது 2 பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.  திருப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் இணை பதிவாளருக்கு மாதம் தோறும் வசூல் செய்யப்படும் லஞ்ச பங்கு தொகை ரூ.7 லட்சம் என்றால் விடுப்பில் சென்ற அதிகாரி இதற்கு முன்பு எத்தனை மாதங்கள் திருப்பூரில் வேலை பார்த்தார்? ஒவ்வொரு மாதமும் அவருக்கு கிடைத்த லஞ்சம் எவ்வளவு? இதே போல் பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச பணம் புரள்கிறதா, என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் சார் பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள அதிகாரிகளிடமும், அலுவலக ஊழியர்களிடமும், பணம் கைமாறியது தொடர்பான விசாரணை நடத்தியதுடன், அங்குள்ள ஆவணங்களையும் சரிபார்த்தனர். பல மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனை குறித்து, உரிய விசாரணைக்கு பின்னர் முழு விவரமும் தெரியவரும் என்றும், சம்மந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

சைதாப்பேட்டைக்கு ஒரு கோடி
திருப்பூர் மாவட்ட இணை சார் பதிவாளராக பணியாற்றும் அதிகாரி, சென்னை சைதாப்பேட்டை பத்திரப்பதிவு பதவியை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். பதவியைப் பிடிக்க வேண்டும் என்று அமைச்சரை சந்திக்க கடந்த ஒரு மாதமாக சென்னையில் தங்கியுள்ளார். அமைச்சர் உத்தரவின் பேரில், அண்ணாநகரில் உள்ள புரோக்கர் ராமுரெட்டியை கடந்த ஒரு மாதமாக அந்த அதிகாரி சந்தித்து வந்துள்ளார். சைதாப்பேட்டை பதவியைப் பிடிக்க ஒரு கோடி ரூபாய் வரை அந்த அதிகாரி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணி மாறுதல் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதேநேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த தகவல்கள் பத்திரப்பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரனுக்கு தெரிந்ததும், அவர் அமைச்சர் வீரமணியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இதனால் நேற்று காலையில் வெளியாக இருந்த பணி மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டது. மாலையில், பணம் வாங்கியதால் உடனடியாக பணிமாறுதல் பட்டியலை வெளியிடும்படி உத்தரவிடப்பட்டது.

இதனால் பணி மாறுதல் உத்தரவு வெளியானது. மேலும், இந்த அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தவருக்கு, திருப்பூரில் பணி வழங்கப்பட்டது. அவர் சென்னைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை அரசுக்கு அறிக்கை அளித்திருந்தது. பணம்தான் முக்கியம் என்று எல்லோரும் கருதுவதால், அதை பயன்படுத்திக் கொண்டு சென்னைக்கு வந்து விட்டார். சைதாப்பேட்டை வளம் கொழிக்கும் பகுதியாகும். இனி அவர் எவ்வளவு சம்பாதிப்பார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்கின்றனர் ஊழியர்கள்.

Tags : Palladam Registrar, Bribery, Officers
× RELATED திருவண்ணாமலை சார்பு நில ஆய்வாளர்...