அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் இனி 10 ஆயிரம்: துணை முதல்வர் அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும்  பண்டிகை முன்பணம் 5000லிருந்து 10,000ஆக உயர்த்தப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பேரவையில் நேற்று பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை,  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி,  ஓய்வூதியங்களும் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் ஆகிய துறைகளின் மானிய  கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: கொடிநாள் நிதி வசூலில் தொடர்ந்து 15  ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. மேலும், இந்த வருடம்  முதல், கொடிநாள் நிதிக்கு வருமான வரி விலக்கும் பெறப்பட்டுள்ளது. பண  பயன்கள் மற்றும் கல்வி உதவி தொகை என 2018-19ம் ஆண்டில் 26.09 கோடி,  முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் பயன் பெற்றுள்ளனர்.

கடந்த  2018ம் ஆண்டில் பெறப்பட்ட 2,08,216 மனுக்களில், 2,05,949 மனுக்களும்,  இணையதளம் வழியாக பெறப்பட்ட 49,791 மனுக்களில், 49,169 மனுக்களும் இதுவரை  தீர்வு செய்யப்பட்டுள்ளன.அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்  ஆகியோர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.5000லிருந்து  10,000ஆக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை  களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை 5.1.2019 அன்று  அரசிடம் அளித்துள்ளது. ஆய்விற்கு பின் இப்பரிந்துரைகளின் மீது உரிய ஆணைகள்  வெளியிடப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை  முன்பணம் இனி 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். திருமழிசை  துணைக்கோள் நகரம் திட்டத்தை, பகுதி வாரியாக செயல்படுத்த உத்தேசித்து  முதற்கட்டமாக, 122.99 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.245.70 கோடி மதிப்பீட்டில்  மேம்பாட்டு பணிகள் முடிவுற்றுள்ளன.

பொதுமக்களின் தேவை அடிப்படையில் 6 முதல்  7 ஆண்டுகளில் பல்வேறு கட்டமாக வணிக வளாகங்களும் மற்றும் 9000 அடுக்குமாடி  குடியிருப்புகளும், குறிப்பாக குறைந்த வருவாய் பிரிவினர் பயனடையும் வகையில்  கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கத்திப்பாரா  சந்திப்பில் சிஎம்டிஏ நிதி உதவியுடன் ரூ.14.50 கோடியில் மேம்பாலம்  மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் பொதுமக்கள் வளாகம், கடைகள், உணவகங்கள், வாகன  நிறுத்துமிட வசதி, இயற்கை எழில் கொண்ட பூங்கா மற்றும் விளம்பர வசதிகள்  ஆகியவை அங்கு அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

மெட்ரோ ரயில் விரிவாக்கம்:

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-IIன் கீழ் மூன்று வழித்தடங்களுக்கு  வழித்தடம்-3ல் மாதவரம் முதல் சிப்காட் வரை 45.8 கி.மீ., வழித்தடம்-4ல் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ மற்றும் வழித்தடம்-5ல் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47.0 கி.மீ. ஆக மொத்தம் 118.9 கி.மீ. நீளத்தில், 69,180 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கு  அரசு கொள்கையளவிலான ஒப்புதலை ஜனவரி 2019ல் வழங்கி மத்திய அரசின் ஒப்புதல்  மற்றும் நிதியுதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Related Stories: