துணை முதல்வர் ஓபிஎஸ்சின் கார் டிரைவர் மகள் திடீர் தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கார் டிரைவராக உள்ளவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் கார் டிரைவராக இருந்து  வருபவர் பாஸ்கரன்.  இவர், சைதாப்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் செளமியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம்  இரவு தூங்க சென்ற சௌமியா நேற்று காலை வெகு நேரமாகியும்  எழுந்து வராததால் வீட்டில் உள்ளவர்கள் அவரது அறை கதவை தட்டி எழுப்ப முயற்சித்துள்ளனர். நீண்ட நேரம் கதவு தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த  அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் செளமியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஏற்கனவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதனால் வலியின் காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வேறு ஏதேனும் காரணமாக சௌமியா தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  துணை முதல்வரின் கார் டிரைவர் மகள் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: