அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா சட்டப்பேரவையில் காரசார விவாதம்: கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகப் பெரிய நெருக்கடி - மு.க.ஸ்டாலின்,..தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை:  சட்டப்பேரவையில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், அணை பாதுகாப்பு மசோதா குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அணைகள் பாதுகாப்பு மசோதா என்பது மீண்டும் கொண்டு வருவது அது கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்து இருக்கின்றது என்பது தான் உண்மை. காவிரியின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த கர்நாடக அரசின் கட்டுப்பாட்டை எடுத்து இருக்கக்கூடிய மத்திய அரசு இப்பொழுது அனைத்து மாநிலங்களில் இருக்கக்கூடிய அணைகளின் கட்டுப்பாடுகளை பாதுகாப்பு என்ற பெயரில் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்திருப்பது என்பது வேதனை தரக்கூடிய செய்தியாக அமைந்திருக்கின்றது. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துணைக் காவடு, பெருவாரிப் பள்ளம் போன்ற அணைகள் தமிழகத்திற்கு சொந்தமானவை. ஆனால் கேரள மாநிலத்திலும் அது இருக்கின்றது.

இந்த அணை பாதுகாப்பு மசோதா தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மேற்கண்ட அணைகளின் பாதுகாப்பை எடுத்துக் கொள்ளக் கூடியதே என்பது ஒரு அராஜக போக்கு. அணைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசின் உரிமை. ஏற்கனவே இதே அவையில் அணை பாதுகாப்பு மசோதா குறித்த கவலைகள் அனைத்தையும் நாம் தெரிவித்திருக்கின்றோம். தெரிவித்தது மட்டுமல்லாமல், தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் இந்த மசோதாவை மாநிலங்களோடு கலந்து ஆலோசிக்காமல் கொண்டு வரக்கூடாது என்று கடந்த 26-6-2018 அன்று இதை அவையில் தீர்மானமும் நாம் நிறைவேற்றி இருக்கின்றோம். அதை மீறி மீண்டும் மத்திய அரசு கொண்டு வருவது என்பது வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கின்றது. எனவே, முதல்வர் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: இது தொடர்பாக பிரதமருக்கு 14.12.2018 அன்று நான் எழுதிய கடிதத்தில், இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறுமாறு நீர்வள அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் வரை இம்மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளேன். 15.6.2018 அன்று பிரதமருக்கு மீண்டும் இது தொடர்பாக கடிதம் எழுதப்பட்டது.  மேலும், இதே கருத்தினை வலியுறுத்தி 26.6.2018 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமருக்கு அனுப்பப்பட்டது.   தமிழ்நாட்டிற்கு சொந்தமான முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு, இயக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த அணைகளை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அணையின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழுவை அமைப்பது தமிழ்நாட்டின் உரிமைகளில் தலையிடுவதாகும்.

 பிரதமரிடம் 27.1.2019 அன்று அளித்த கோரிக்கை மனுவில் உள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றான அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018 குறித்து தனது 15.6.2018 மற்றும் 14.12.2018 நாளிட்ட கடிதங்களைச் சுட்டிக்காட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைப்பது மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதாகும் என்பதைக் குறிப்பிட்டு, அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் வரை அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018 -யை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே கருத்து பிரதமரிடம் 15.6.2019 அன்று அளித்த கோரிக்கை மனுவிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

அணை பாதுகாப்பு சட்ட மசோதா, 2018-ஐ திரும்பப்பெற வைத்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளின் மீதான தமிழ்நாட்டின் உரிமையினை நிலைநாட்ட அதிமுக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும்.

Related Stories: